தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு
சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
முற்றிக்குத் தத்தைக் கொப்பென
சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு
வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்
தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன்
திக்குக்கெட் டொட்டுச் சிட்டென
பட்டத்துற் புத்திக் கட்டற
செப்பத்துற் பற்றற் கற்புத ...... மருள்வாயே
தக்குத்தக் குக்குக் குக்குட
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை
தத்தித்தித் தித்தித் தித்தென
தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை
சத்திக்கொற் றத்திற் குத்திய ...... முருகோனே
துக்கித்திட் டத்தித் துக்கக
நெக்குப்பட் டெக்கித் துட்டறு
சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ...... ளருள்வேலா
துற்றப்பொற் பச்சைக் கட்கல
பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ
சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ...... பெருமாளே.
- சொக்குப் பொட்டு எத்திக் கைப்பொருளைக் கெத்தில் பற்றிச்
சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றித் தெட்டிகள் முலை மீதே
சொக்குப் பொடி போட்டு ஏமாற்றி, கையில் உள்ள பொருளைத் தந்திர வழியில் கைப்பற்றி, உறுதியுடன் (வந்தவரைச்) சுற்றி வளைத்து பேச்சினால் தாக்கி, வஞ்சிக்கும் மார்பகங்கள் மேலே - சுற்றுப் பொன் பட்டுக் கச்சினர் முற்று இக்குத் தத்தைக்கு
ஒப்பு என சொல் பித்துக் கற்பில் செப்பிய துயராலே
சுற்றப்பட்டுள்ள பட்டுக் கச்சைக் கொண்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் முதிர்ந்த கரும்பு, கிளி இவைகளுக்கு ஒப்பு என்று சொல்லும்படியான மொழி என்கின்ற மயக்கத்தைத் தரும் சொல்லால் ஏற்படும் துன்பத்தில், - சிக்குப்பட்டு உட்கிப் பல் கொடு எற்றிக் கைக்குத்துப் பட்டு
இதழ் தித்திப்பிற்கு ஒத்துப் பித்து உயர் கொடு நாயேன்
மாட்டிக் கொண்டு நாணமும் அச்சமும் அடைந்து பல கொடுமையான அடிகளையும் கைக் குத்துகளையும் வாங்கிக் கொண்டும், வாயிதழ் ஊறலின் இனிப்புக்கு மனம் ஒப்பி, அதில் ஏற்படும் பித்து மிகக் கொண்ட கொடிய நாயனைய நான் - திக்குக் கெட்டு ஒட்டுச் சிட்டு என பட்ட அத் துற்புத்திக்
கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே
திசை தடுமாறி, கண்ணியில் அகப்பட்ட சிட்டுக் குருவி போல் அவஸ்தைப்பட்ட கெட்ட புத்தியின் சம்பந்தம் நீங்க, செம்மையாக உன்னைப் பற்றுவதற்கு அற்புத வரத்தை அருள் புரிவாயாக. - தக்குத்தக் குக்குக் குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத் திக்கு எட்டுப் பொட்டு எழ விருது ஓதை தத் தித்தித்
தித்தித் தித்தென தெற்று
தக்குத்தக் குக்குக் குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென இவ்வாறு, நிலை பெற்றுள்ள எட்டுத் திசைகளும் பொடிபட, வெற்றிச் சின்னங்களின் ஒலி தத் தித்தித் தித்தித் தித்தென செறிவுற, - துட்டக் கட்டர்ப் படை சத்திக் கொற்றத்தில் குத்திய
முருகோனே
துஷ்டர்களாய்க் கஷ்டப்படுவர்களின் சேனையை வேலாயுதத்தின் வெற்றி வீரத்தால் குத்திய முருகோனே, - துக்கித்திட்ட அத்தித் துக்க அக(ம்) நெக்குப்பட்டு எக்கித்
துட்டு அறு சுத்தப் பொன் பத்தர்க்குப் பொருள் அருள்
வேலா
துக்கப்பட்ட கடல் போன்ற துன்ப வீடாகிய மனம் நெகிழ்ந்து மேலான நிலையை எட்டி, தீய குணங்கள் நீங்கப் பெற்ற பரிசுத்த நிலையரான தூய அடியார்களுக்கு உபதேசப் பொருளை அருள் பாலிக்கும் வேலனே, - துற்றப் பொன் பச்சைக் கண் கலபச் சித்ரப் பக்ஷிக் கொற்றவ
நெருங்கியுள்ள அழகிய பச்சை நிறமுள்ளதும், பீலிக் கண்களை உடையதுமான தோகையை உடைய விசித்திரமான மயில் பறவையை வாகனமாக உடைய அரசே, - சொக்கர்க்கு அர்த்தத்தைச் சுட்டிய பெருமாளே.
மதுரை சொக்க நாதராகிய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சுட்டிக் குறித்து அறிவுறுத்திய பெருமாளே.