தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன ...... தனதான
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங்
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு
தினுக்குமிக வுறத்தழுவு ...... குறியாலும்
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல
ரடிக்குமிள நகைக்குமுள ...... மயராதே
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர்
அளப்பரிய பதக்கமல ...... மருள்வாயே
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
கணத்திலவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற்
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
யளித்திடரை யறுத்தருளு ...... மயில்வீரா
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற்
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
சிமிழ்த்தனமு னுறத்தழுவு ...... பெருமாளே.
- குறிப்பு அரிய குழற்கு(ம்) மதி நுதல் புருவ வி(ல்)லுக்கும் இரு
குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும் கொடிப் பவள
இதழ்க்கு(ம்) மிகு சுடர்த் தரள நகைக்கும்
உவமைகள் சொல்ல முடியாத (விலைமாதர்களின்) கூந்தலுக்கும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றிக்கும், வில்லைப் போல் வளைந்த புருவத்துக்கும், இரண்டு செவிகளுக்கும், மாவடு போன்ற கண்களுக்கும், மேலெழுந்து விளங்கும் குமிழம்பூ போன்ற மூக்குக்கும், கொடிப் பவளம் போலச் சிவந்த வாயிதழுக்கும், மிக்க ஒளி வீசும் முத்துப் போன்ற பல்லுக்கும், - அமுதினுக்கு(ம்) மிக உறத் தழுவு குறியாலும் அறப் பெரிய
தனக்கும் அ(ன்)ன நடைக்கும் மினின் இடைக்கும் மலர்
அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே
அமுதினும் இனிக்கும் பேச்சுக்கும், நன்கு பொருந்தத் தழுவிச் சேரும் பெண்குறிக்கும், மிகப் பெரிதான மார்பகத்துக்கும், அன்னம் போன்ற நடைக்கும், மின்னல் போன்ற இடுப்புக்கும், பூப்போன்று மிருதுவான பாதத்திற்கும், புன் சிரிப்புக்கும் என் மனம் சோர்வு அடையாமல், - அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி
அரிப்பிரமர் அளப்பரிய பதக் கமலம் அருள்வாயே
அகத்திய முனிவருக்கு உபதேசித்த ஞானப் பொருளை எனக்கும் அளித்து அருளி, திருமாலும், பிரமனும் கண்டு அளத்தற்கு அரிதான உனது திருவடித் தாமரைகளைத் தந்து அருள் புரிவாயாக. - கறுத்து அடரும் அரக்கர் அணி கருக் குலைய நெருக்கி ஒரு
கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால் கறுத்தருளி
கோபித்து எதிர்த்துத் தாக்கிய அசுரர்களுடைய சேனை அடியோடு நிலை குலைய அவர்களை நெருக்கி, ஒரு கணப் பொழுதில் அவர்களுடைய கொழுப்பு நிறைந்த குடலை ஒளி பொருந்திய வேலாயுதத்தால் சினந்து அழித்து, - அலக்கண் உறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து
இடரை அறுத்து அருளு(ம்) மயில் வீரா
துக்கத்தில் ஆழ்ந்திருந்த தேவர்களுக்கு அவர்களுடைய பொன்னுலகத்தின் உரிமையைத் தந்து அவர்களுடைய வருத்தத்தை நீக்கி அருளிய மயில் வீரனே, - செறுத்து வரு கரித் திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி
சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில் செலக்
கருதி
கோபித்து வந்த யானைக் கூட்டங்கள் திடுக்கிடும்படி வலிய தந்தங்களை சிங்கங்கள் சினத்துடன் பறித்து போர் புரியும் பெருத்த காட்டில் போவதற்கு திட்டமிட்டு, - அறக் கொடிய சிலைக் குறவர் கொடித் தனது சிமிழ்த் தனமும்
உறத் தழுவு(ம்) பெருமாளே.
மிகப் பொல்லாதவர்களான வில் ஏந்தும் குறவர்களின் கொடி போன்ற மகளாகிய வள்ளியின் சிமிழ் போன்ற மார்பினை அழுந்தத் தழுவும் பெருமாளே.