தனத்த தானன தானான தந்தன
தனத்த தானன தானான தந்தன
தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை
சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை
கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு
கயற்க ணார்கனி வாயூற லுண்டணி
கழுத்து மாகமு மேகீப வங்கொடு
கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே
உறுத்து மாரமு மோகாவ டங்களு
மறுத்து நேரிய கூர்வாள்ந கம்பட
உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ
உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை
செருக்கு மோகன வாராத ரங்களை
யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமு
முடுத்த பீலியும் வாரார்த னங்களும்
நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட
நெறித்த வோதியு மாயான்ம னம்பர
தவிக்க மால்தர லாமோக லந்திட
நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய்
மறித்த வாரிதி கோகோவெ னும்படி
வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில்
வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு
வளைத்த தாதையு மாறான குன்றமு
மனைத்து லோகமும் வேதாக மங்களும்
மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே.
- கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன
ஒண் குழை கடக்க ஓடிய ஆலால நஞ்சு அ(ன்)ன வஞ்ச(ம்)
நீடு கயல் க(ண்)ணார்
கோபித்து நீ விடுகின்ற (ரத்த முனையை உடைய) கூரிய வேலாயுதத்தைக் காட்டிலும் அதிகமாக நுனிப்பாகம் செந்நிறம் உற்று, நீண்ட மகர மீன் உருவத்தில் உள்ள ஒளி வீசும் குண்டலங்களையும் தாண்டி ஓடியதாயுள்ள, ஆலகால விஷத்தைப் போன்றதாய், வஞ்சனை எண்ணங்கள் நீண்ட தூரம் அமைந்துள்ளதாய், கயல் மீன் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின், - கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம்
கொடு கலக்க மார்பக(ம்) பாடீர குங்கும கொங்கை மீதே
உறுத்தும் ஆரமு(ம்) மோகா வடங்களும் அறுத்து
கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் ஊறலை பருகி, ஆபரணங்கள் பூண்ட கழுத்தும் உடலும் ஒன்றுபடும் தன்மையில் கலக்க, மார்பினிடத்தே உள்ள சந்தனம் குங்குமம் அணிந்த மார்பகங்களின் மேல் அழுத்தும் முத்து மாலையும் காம மயக்கத்தைத் தரும் பிற மாலைகளும் அறுபட, - நேரிய கூர் வாள் நகம் பட உடுத்த ஆடையும் வேறாய்
உழன்று கழன்று வீழ உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு
இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை ஒழிக்க
ஒழுங்குள்ள கூரிய வாள் போன்ற நகமும் மேலே பட, அணிந்த ஆடையும் வேறாக அலைப்புண்டு நழுவி விழ, இப்படி மனத்தை உருக்கும் தொப்புளில் முழுகி, இடையின் கண் களிப்புறும் காம மயக்கம் மிகுந்த ஆசைகளை ஒழித்துத் தொலைக்க - ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன்
ஒரு வழியும் தெரியவில்லை. உற்ற ஒரு துணையும் கூட நான் காண்கின்றேன் இல்லை. - நிறத்த நுபுர பாதார விந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர்
தனங்களும் நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட
நெறித்த ஓதியுமாய் யான் மனம் பர தவிக்க மால் தரலாமோ
(முருகன் வள்ளியிடம் பேசிய பேச்சு) ஒளி பொருந்திய, சிலம்பணிந்த திருவடித் தாமரைகளும், உடுத்துள்ள மயில் தோகையும்*, கச்சு அணிந்த மார்பகங்களும், என் மார்பிலே வந்து தாக்குகின்ற வேல் போன்ற கண்களும், வண்டுகள் பாடி ஒலிக்க சுருள் கொண்ட கூந்தலுமாய் என் முன் நின்று, நான் மனம் வேதனைப்படும்படியான மோகத்தை எனக்கு நீ தருதல் நன்றோ? - கலந்திட நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு
கூர்வாய்
என்னைத் தழுவ நீ நினைப்பாயாக என்று வேல் ஏந்திய வேடர் பெண்ணாகிய வள்ளியுடன் நட்பு மிக்குப் பேசினவனே, - மறித்த வாரிதி கோ கோ எனும்படி வெறுத்த ராவணன் வாழ்
நாளை அம்பினில் வதைத்த மாமனும்
(இலங்கைக்குப் போகா வண்ணம்) தடுத்த கடல் கோ கோ என்று கதறும்படி (பாணத்தை விட்டவனும்), தன்னை வெறுத்த ராவணன் வாழ்நாட்களை அம்பு கொண்டு வதைத்த மாமனாகிய திருமாலும், - மேவார் புரம் கனல் மண்ட மேரு வளைத்த தாதையு(ம்)
மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேத ஆகமங்களும்
மதித்த சேவக
பகைவர்களது திரிபுரத்தில் தீ நெருங்கி எழும்படி மேருமலையை வில்லாக வளைத்த தந்தையாகிய சிவபெருமானும், பகைமை பூண்டிருந்த கிரெளஞ்ச மலையும், எல்லா உலகங்களும், வேதங்களும், ஆகமங்களும் மதித்து நின்ற வலிமை உள்ளவனே, - வான் ஆளும் உம்பர்கள் தம்பிரானே.
வானுலகை ஆட்சி செய்யும் தேவர்களின் தம்பிரானே.