திருப்புகழ் 1133 இரவொடும் பகலே (பொதுப்பாடல்கள்)

தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா ...... தனதான
இரவொ  டும்பக  லேமா  றாதே 
அநுதி  னந்துய  ரோயா  தேயே 
யெரியு  முந்தியி  னாலே  மாலே  ......  பெரிதாகி 
இரைகொ  ளும்படி  யூடே  பாடே 
மிகுதி  கொண்டொழி  யாதே  வாதே 
யிடைக  ளின்சில  நாளே  போயே  ......  வயதாகி 
நரைக  ளும்பெரி  தாயே  போயே 
கிழவ  னென்றொரு  பேரே  சார்வே 
நடைக  ளும்பல  தாறே  மாறே  ......  விழலாகி 
நயன  முந்தெரி  யாதே  போனால் 
விடிவ  தென்றடி  யேனே  தானே 
நடன  குஞ்சித  வீடே  கூடா  ......  தழிவேனோ 
திருந  டம்புரி  தாளீ  தூளீ 
மகர  குண்டலி  மாரீ  சூரி 
திரிபு  ரந்தழ  லேவீ  சார்வீ  ......  யபிராமி 
சிவனி  டந்தரி  நீலீ  சூலீ 
கவுரி  பஞ்சவி  யாயீ  மாயீ 
சிவைபெ  ணம்பிகை  வாலா  சீலா  ......  அருள்பாலா 
அரவ  கிங்கிணி  வீரா  தீரா 
கிரிபு  ரந்தொளிர்  நாதா  பாதா 
அழகி  ளங்குற  மானார்  தேனார்  ......  மணவாளா 
அரிய  ரன்பிர  மாவோ  டேமூ 
வகைய  ரிந்திர  கோமா  னீள்வா 
னமரர்  கந்தரு  வானோ  ரேனோர்  ......  பெருமாளே. 
  • இரவொடும் பகலே மாறாதே
    இரவும் பகலுமாக, நீங்குதல் இன்றி,
  • அநுதினந்துயர் ஓயாதேயே
    நாள் தோறும் துக்கம் இடைவிடாமல் பீடிக்க,
  • எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி
    தீப்போல வயிற்றில் எரிகின்ற பசியால் ஆசைகளே பெரிதாக வளர்ந்து,
  • இரைகொளும்படி யூடே
    உணவு வேண்டி வாழ்க்கையின் ஊடே
  • பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே
    உழைப்பே மிகுதியாகி, தர்க்கம் செய்வதிலே எப்போதும் காலம் கழித்து,
  • இடைகளின்சில நாளே போயே வயதாகி
    இவ்வாறே வாழ்க்கையின் இடைக்காலத்தில் சிலகாலம் கழிய, பின்பு வயது மூத்து,
  • நரைகளும்பெரிதாயே போயே
    நரைகள் அதிகமாகிப் போய்
  • கிழவனென்றொரு பேரே சார்வே
    கிழவன் என்ற ஒரு பேரே வந்து கூடிட,
  • நடைகளும்பல தாறே மாறே விழலாகி
    நடைகளும் நேராக இன்றி தாறுமாறாகி, கீழே விழும் நிலைமைக்கு வந்து,
  • நயனமுந்தெரியாதே போனால்
    கண்களும் தெரியாமல் குருடனாகிப் போனால்,
  • விடிவதென்று அடியேனே தானே
    அடியவனாகிய நான் என்போது தான் துன்பம் நீங்கி விடிந்து இன்பம் அடைவது?
  • நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ
    காலை வளைத்துத் தூக்கி நடனம் செய்பவனாகிய சிவபிரானின் மோக்ஷ வீட்டை அடையாமலேயே நான் அழிந்து போவேனோ?
  • திருநடம்புரி தாளீ தூளீ
    திருநடனம் செய்கின்ற பாதங்களை உடையவள், திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள்,
  • மகர குண்டலி மாரீ சூரி
    மகர மீன் போன்ற குண்டலங்களைத் தரித்தவள், மாரியாகிய துர்க்கை, மகா காளி,
  • திரிபுரந்தழல் ஏவீ சார்வீ யபிராமி
    திரிபுரங்களில் நெருப்பை ஏவியவள், புகலிடமாக உள்ளவள், பேரழகி,
  • சிவன் இடந்தரி நீலீ சூலீ
    சிவனது இடப்பாகத்தைத் தரித்தவள், நீல நிறத்தாள், சூலம் ஏந்தியவள்,
  • கவுரி பஞ்சவி யாயீ மாயீ
    கெளரி, ஐந்தாம் சக்தியாகும் அனுக்கிரக சக்தி, தாய், மகமாயி,
  • சிவைபெண் அம்பிகை வாலா சீலா அருள்பாலா
    சிவாம்பிகை, பாலாம்பிகை, பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய குழந்தையே,
  • அரவ கிங்கிணி வீரா தீரா
    ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள வீரனே, தீரனே,
  • கிரிபுரந்தொளிர் நாதா பாதா
    மலைகளைக் காக்கும் ஒளியாக விளங்கும் நாதனே, ஞானிகளின் தலைமேல் பதிக்கும் பாதனே,
  • அழகிளங்குற மானார் தேனார் மணவாளா
    அழகும் இளமையும் பொலியும் குறத்தி, மான் போன்ற வள்ளியின் இனிமை நிறைந்த மணவாளனே,
  • அரியரன்பிர மாவோடே மூவகையர்
    திருமால், சிவன், பிரமா எனப்படும் மூவகைத் தெய்வங்கள்,
  • இந்திர கோமான் நீள்வானமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே.
    இந்திரன் என்ற அரசன், பெரிய விண்ணுலகிலுள்ள தேவர்கள், கந்தர்வர் ஆனோர், பிற எல்லா வகையினர்க்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com