தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த ...... தனதான
இரவினிடை வேள்தொ டுத்து டன்று
முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி
யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே
எதிர்பொருது மானி னைத்து ரந்து
சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி
யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
விசிறிவளை மாத ரைக்க லந்து
மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
சுழிமிதுன வாவி யிற்பு குந்து
முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும்
திரையுலவு சாக ரத்தி லங்கை
நகரிலுறை ராவ ணற்கி யைந்த
தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ்
சிதையவொரு வாளி யைத்து ரந்த
அரிமருக தீத றக்க டந்து
தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே
அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து
கருதுமொரு மூவ ருக்கி ரங்கி
யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து
இரவுபக லாக நெக்க விழ்ந்த
அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே.
- இரவின் இடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர்
வாளியைப் பிணங்கி
இரவுப் பொழுதில் மன்மதன் கையில் எடுத்து கோபித்து வலிமையாகச் செலுத்தும் மலர்ப் பாணங்களுடன் மாறுபட்டு (அந்தப் பாணங்களுக்கு எதிர் பாணங்களாக விளங்கி), - இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே எதிர்
பொருது மானினைத் துரந்து
இரண்டு காதில் உள்ள குண்டலங்களையும் தாக்கி, நீர் பரவியுள்ள கடலுடன் எதிர்த்து மாறுபட்டு (அதனினும் பெரியதாய் ஆழமாய் விளங்கி), (தமது பார்வையின் அழகால்) மான்கள் எல்லாம் (வெட்கிக் காட்டுக்குள்) புகும்படிச் செய்து, - சலதி கிழி வேல் தனைப் பொருந்தி இனி அமுத ஆலம் உற்ற
கண்கள் வலையாலே
கடலைக் கிழித்த (வற்றும்படி செய்த) வேலாயுதத்துக்கு இணையாகி, பின்னும் அமுதத்தையும் ஆலகால விஷத்தையும் தம்மிடம் கொண்ட கண்கள் எனப்படும் வலையைக் கொண்டு, - முரண் இளைஞர் ஆவியைத் தொடர்ந்து விசிறி வளை
மாதரைக் கலந்து
வலிமை மிக்க வாலிபர்களுடைய உயிர் மீது தொடர்ந்து (கண் வைத்துப்) பற்றி வளைத்துத் தம் வசப்படுத்தும் விலைமாதர்களுடன் கூடி, - மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகு(ம்) முகிழ்
முகுளி தார(ம்) வெற்பு அணைந்து
அவர்களுடைய (குதலைப்) பேச்சு புறப்படும் கொவ்வைப் பழம் போன்று சிவந்த வாயிதழின் கரும்பின் சுவையை உண்டு, அமுதம் பொதிந்துள்ள, அரும்பும் மொட்டுப் போன்ற முத்து மாலையை அணிந்த, மலை பொன்ற மார்பகத்தை அணைந்து, - சுழி மிதுன வாவியில் புகுந்து முழுகி அழியாமல் நற் பதங்கள்
தர வேணும்
தொப்புள் என்னும் இன்பக் குளத்தில் படிந்து, முழுகி அழிந்து போகாமல் உனது நன்மை தரும் திருவடியைத் தரவேண்டும். - திரை உலவு சாகரத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு
இயைந்த தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும்
சிதைய ஒரு வாளியைத் துரந்த அரி மருக
அலைகள் வீசுகின்ற கடல் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்துவந்த ராவணனுடைய பத்து தலைகளும், இருபது ஒழுங்காய் அமைந்த வலிமையான தோள்களும் அழிபட, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய திருமாலின் மருகனே, - தீது அறக் கடந்து தெளி மருவு காரணத்து அமர்ந்த
முருகோனே
தெளிவான அறிவு பொருந்திய மூலப் பொருளில் அமைந்து விளங்கும் முருகனே, - அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு
இரங்கி அருளும் ஒரு நாயகன் பணிந்த குரு நாதா
காவல்கள் கொண்ட மதில்கள் சூழ்ந்திருந்த திரிபுரத்தில் இருந்து தம்மைத் தியானித்து வணங்கிய மூன்று* சிறந்த பக்தர்களுக்கு இரக்கம் கொண்டு (திரிபுரத்தை எரித்தபோதும்) அவர்களுக்கு அருள் புரிந்த ஒப்பற்ற நாயகனான சிவபெருமான் வணங்கிய குரு நாதா, - அகல் முடிவை ஆதியைத் தெளிந்து இரவு பகலாக நெக்கு
அவிழ்ந்த அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே.
பரந்த முடிவுக்கு முடிவாய், ஆதிக்கு ஆதியாய் உள்ள பொருள் இன்னதெனத் தெரிந்து, இரவும் பகலும் உள்ளம் பக்தியால் நெகிழ்ந்து உருகும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிக் கேட்டு மகிழும் பெருமாளே.