திருப்புகழ் 1131 இடர் மொய்த்து (பொதுப்பாடல்கள்)

தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
தனதத்தத் தனதத்தத் ...... தனதான
இடர்மொய்த்துத்  தொடரிற்பொய்க்  குடிலக்கிக்  கிடையிட்டிட் 
டினிமைச்சுற்  றமுமற்றைப்  ......  புதல்வோரும் 
இனமொப்பித்  திசையச்சொற்  பலகத்திட்  டிழியப்பிற் 
கிடையத்துக்  கமும்விட்டிட்  ......  டவரேக 
விடமெத்தச்  சொரிசெக்கட்  சமன்வெட்டத்  தனமுற்றிட் 
டுயிர்வித்துத்  தனையெற்றிக்  ......  கொடுபோமுன் 
வினைபற்றற்  றறநித்தப்  புதுமைச்சொற்  கொடுவெட்சிப் 
புயவெற்றிப்  புகழ்செப்பப்  ......  பெறுவேனோ 
அடர்செக்கர்ச்  சடையிற்பொற்  பிறையப்புப்  புனையப்பர்க் 
கறிவொக்கப்  பொருள்கற்பித்  ......  திடுவோனே 
அலகைக்குட்  பசிதித்தப்  பலகைக்கொத்  ததுபட்டிட் 
டலறக்குத்  துறமுட்டிப்  ......  பொரும்வேலா 
கடலுக்குட்  படுசர்ப்பத்  தினில்மெச்சத்  துயில்பச்சைக் 
கிரிகைக்குட்  டிகிரிக்கொற்  ......  றவன்மாயன் 
கமலத்திற்  பயில்நெட்டைக்  குயவற்கெட்  டிசையர்க்குக் 
கடவுட்சக்  கிரவர்த்திப்  ......  பெருமாளே. 
  • இடர் மொய்த்துத் தொடர் இல் பொய்க் குடில் அக்கிக்கு இடை இட்டிட்டு
    துன்பங்கள் மொய்த்து நெருங்கித் தொடரும் இடமாகிய நிலையில்லாத உடல் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு,
  • இனிமைச் சுற்றமும் மற்றைப் புதல்வோரும் இனம் ஒப்பித்து இசையச் சொல் பல கத்திட்டு இழிய
    இனிய சுற்றத்தினரும், பின்னும் புதல்வர்களும் தங்கள் தங்கள் உறவைச் சொல்லி அச்சமயத்துக்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க,
  • பிற்கு இடையத் துக்கமும் விட்டிட்டு அவர் ஏக
    பின்பு மனம் தளர்ந்து இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அந்தச் சுற்றத்தினர் போக,
  • விடம் மெத்தச் சொரி செக்கண் சமன் வெட்டத் தனம் உற்றிட்டு
    விஷம் அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை உடைய யமன் அழிக்க வேண்டும் என்ற பண்பை உணர்த்தும் தன்மையை அடைந்து
  • உயிர் வித்துத்தனை எற்றிக் கொடு போ முன் வினை பற்று அற்று அற
    உயிராகிய விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு முன்பாக, எனது வினையும் பற்றும் அற்று ஒழிந்து நீங்க,
  • நித்தப் புதுமைச் சொல்கொடு வெட்சிப் புய(ம்) வெற்றிப் புகழ் செப்பப் பெறுவேனோ
    நாள் தோறும் புதிய புதிய சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த உனது திருப் புயங்களின் வெற்றிப் புகழை* உரைக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
  • அடர் செக்கர்ச் சடையில் பொன் பிறை அப்புப் புனை அப்பர்க்கு
    நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச் சந்திரனும் கங்கையும் அணிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு
  • அறிவு ஒக்கப் பொருள் கற்பித்திடுவோனே
    ஞானம் கூடிய பிரணவப் பொருளை உபதேசித்தவனே,
  • அலகைக்குள் பசி தித்தப் பலகைக் கொத்தது பட்டிட்டு அலறக் குத்து உற முட்டிப் பொரும் வேலா
    பேய்க் கூட்டங்களுள் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிடவும், ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துச் சண்டை செய்த வேலனே.
  • கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்சத் துயில் பச்சைக் கிரி கைக்குள் திகிரிக் கொற்றவன் மாயன்
    பாற்கடலில் அமைந்த ஆதிசேஷன் மேல் அடியார்கள் போற்றித் துதிக்க அறி துயில் கொண்டுள்ள பச்சை மலை போன்ற வடிவை உள்ளவனும், திருக் கரத்தில் சக்கரம் ஏந்திய அரசனும் ஆகிய திருமாலுக்கும்,
  • கமலத்தில் பயில் நெட்டைக் குயவற்கு எண் திசையர்க்குக் கடவுள் சக்கிரவர்த்திப் பெருமாளே.
    தாமரையில் வீற்றிருக்கும் நெடிய படைப்பவனாகிய பிரமனுக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள மற்றவர்களுக்கும் கடவுள் சக்கிரவர்த்தியாக விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com