தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான
இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
சுருளளகந் தூற்றி யேமு டித்து
மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க
மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி
படிகொடறங் காத்த மாப ரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே
அரியயனின் றேத்த வேமி குத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே.
- இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே
நிறைத்து
சினம் தங்கிய வேலாயுதத்தை எடுத்து விஷம் முழுமையும் நிரம்பும்படி நிறைவு செய்து, - இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே இனிமை
உடன் பார்த்து உ(ள்)ளே அழைத்து
இரு காதுகளையும் மோதி மீள்கின்றதும் கயல் மீன் போன்றதுமான (முன்பு சொன்ன வேலை ஒத்த) கண்கள் என்னும் வலையால் விலைமாதர் (ஆடவரை) இன்பகரமாக நோக்கி, தமது வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று, - முக படமும் சேர்த்து வார் அழுத்தும் இரு வரையும் காட்டி
மால் எழுப்பி விலை பேசி
முகத்தைத் துணியால் மூடி, ரவிக்கையை அழுத்தும் மலை போன்ற இரு மார்பகங்களையும் காட்டி காம ஆசையை ஊட்டி, கிடைக்க வேண்டிய பொருள் எவ்வளவு என்று பேசி முடித்து, - மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே
முடித்து
இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட கூந்தலை விரித்து உதறி முடித்து, - மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து நிலையாக வரு
பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும்
தெருவிடையே நின்று நிரம்பச் சிரித்து, மாறுதல் இல்லாமல் என்றும் வருவதான பொருள் உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறிக்கின்ற, - அரிவையர் தம் பேச்சிலே முழுக்க மனம் உருகும்
தூர்த்தனாய் இளைத்து விடலாமோ
விலைமாதர்களின் பேச்சிலே முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக நான் சோர்வு அடையலாமோ? - படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி
நூல் இடைச்சி
உலகம் முழவதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகி, வேதங்களால் பேசப்படுபவள், நுண்ணிய இடையை உடையவள், - பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி படி கொடு
அறம் காத்த மா பரைச்சி
பிறைச் சந்திரன் விளங்கும், தாழ்ந்து தொங்கும் சடையை உடையவள், இரண்டு நாழி எனப்படும் படி நெல்லைக் கொண்டு (காஞ்சீபுரத்தில்) முப்பத்திரண்டு அறங்களையும்* செய்த சிறந்த பரதேவதை, - மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி பல திசையும் போய்க்
குலா விருப்பி நெடு நீலி அடு புலியின் தோல் படாம்
உடைச்சி
ரத்தினங்களும் வைரங்களும் கோத்த வளையல்களைக் கொண்ட தோளை உடையவள், பல திக்குகளிலும் சென்று விளங்கும் விருப்பத்தை உடையவள், பெருமை மிக்க நீல நிறம் உடையவள், கொல்ல வரும் புலியின் தோலைச் சேலையாக உடுத்துள்ளவள், - சமர முகம் காட்டு(ம்) மால் விடைச்சி அகிலமும் உண்டார்க்கு
நேர் இளைச்சி பெருவாழ்வே
போர் செய்யும் முகத்தைக் காட்டும் (நந்தி என்ற) பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவள், உலகம் முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையாகிய பார்வதியின் பெருஞ் செல்வமே, - அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க
வாள் எடுத்த
திருமாலும் பிரமனும் நின்று வணங்கவும் சிறந்த தேவர் கூட்டம் சிறையனின்று மீட்சி பெறவும் வாளாயுதத்தை எடுத்தவனும், - அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே.
அசுரர் கூட்டம் பாழாக வேலாயுதத்தை எடுத்தவனுமாகிய பெருமாளே.