திருப்புகழ் 1129 ஆனாத ஞான (பொதுப்பாடல்கள்)

தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான
ஆனாத  ஞான  புத்தி  யைக்கொ  டுத்ததும் 
ஆராயு  நூல்க  ளிற்க  ருத்த  ளித்ததும் 
ஆதேச  வாழ்வி  னிற்ப்ர  மித்தி  ளைத்துயி  ......  ரழியாதே 
ஆசாப  யோதி  யைக்க  டக்க  விட்டதும் 
வாசாம  கோச  ரத்தி  ருத்து  வித்ததும் 
ஆபாத  னேன்மி  கப்ர  சித்தி  பெற்றினி  ......  துலகேழும் 
யானாக  நாம  அற்பு  தத்தி  ருப்புகழ் 
தேனூற  வோதி  யெத்தி  சைப்பு  றத்தினும் 
ஏடேவு  ராஜ  தத்தி  னைப்ப  ணித்ததும்  ......  இடராழி 
ஏறாத  மாம  லத்ர  யக்கு  ணத்ரய 
நானாவி  கார  புற்பு  தப்பி  றப்பற 
ஏதேம  மாயெ  னக்க  நுக்ர  கித்ததும்  ......  மறவேனே 
மாநாக  நாண்வ  லுப்பு  றத்து  வக்கியொர் 
மாமேரு  பூத  ரத்த  னுப்பி  டித்தொரு 
மாலாய  வாளி  யைத்தொ  டுத்த  ரக்கரி  ......  லொருமூவர் 
மாளாது  பாத  கப்பு  ரத்ர  யத்தவர் 
தூளாக  வேமு  தற்சி  ரித்த  வித்தகர் 
வாழ்வேவ  லாரி  பெற்றெ  டுத்த  கற்பக  ......  வனமேவும் 
தேநாய  காஎ  னத்து  தித்த  வுத்தம 
வானாடர்  வாழ  விக்ர  மத்தி  ருக்கழல் 
சேராத  சூர  னைத்து  ணித்த  டக்கிய  ......  வரைமோதிச் 
சேறாய  சோரி  புக்க  ளக்கர்  திட்டெழ 
மாறாநி  சாச  ரக்கு  லத்தை  யிப்படி 
சீராவி  னால  றுத்த  றுத்தொ  துக்கிய  ......  பெருமாளே. 
  • ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்
    என்றும் கெடாத ஞான அறிவைக் கொடுத்ததையும்,
  • ஆராயு(ம்) நூல்களில் கருத்து அளித்ததும்
    ஆராய்ந்து அறிய வேண்டிய நூல்களில் கருத்தைக் கொடுத்ததையும்,
  • ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே
    ஒரு வழியாக நிலைத்திராத மயக்கம் உள்ள வாழ்க்கையில் மயங்கித் திளைத்து, தளர்ச்சி உற்று உயிர் அழிந்து போகாமல்,
  • ஆசா பயோதியைக் கடக்க விட்டதும்
    ஆசை என்கின்ற கடலைக் கடக்கும்படியான ஆற்றலைத் தந்ததையும்,
  • வாசா மகோசரத்து இருத்து வித்ததும்
    வாக்குக்கு எட்டாத ஒரு நிலையில் என்னை இருக்கும்படி அருளியதும்,
  • ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகேழும் யான் ஆக நாம(ம்)
    கீழ்ப்பட்டவனான நான் மிக்க புகழ் எய்தி இனிமையுடன் ஏழு உலகில் உள்ளவரும் உள்ளவையும் நானே என்னும் அத்துவித நிலையைப் பெறுமாறு புகழ் கொண்டதும்,
  • அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி
    மிக அற்புதமாக அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை தேன் ஊறிய இனிமையுடன் பாடி,
  • எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும்
    எல்லா திசைகளிலும் நான் எழுதி அனுப்பும் கடிதமோ பாடலோ ராஜமரியாதையுடன் போற்றப்படத்தக்க மேன்மையை எனக்கு அருளிச் செய்ததும்,
  • இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய
    துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாத பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும்,
  • நானா விகார புற்புதம் பிறப்பு அற
    பலவிதமான கலக்கங்கள் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், டும்பு, அசூயை எனப்பட்ட துர்க் குணங்கள்) கூடியதும், நீர்க்குமிழிபோல் தோன்றி மறைவதுமான பிறப்பும் நீங்கும்படியாக
  • ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே
    இன்பம் தரும் வகையில் எனக்கு வரமாகத் தந்து அருளியதும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
  • மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி
    வாசுகி என்னும் பெரிய பாம்பாகிய கயிற்றை பலமாகக் கட்டியுள்ள
  • ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து
    ஒப்பற்ற பெரிய மேரு மலையாகிய வில்லைப் பிடித்து,
  • ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து
    சிறந்த திருமாலாகிய அம்பைச் செலுத்தி,
  • அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே
    அங்கிருந்த அசுரர்களில், மூன்று பேர்* மட்டும் இறந்து போகாமல், பாபச் செயலில் ஈடுபட்டிருந்த திரிபுரத்து அசுரர்கள் பொடியாய் விழ,
  • நுதல் சிரித்த வித்தகர் வாழ்வே
    முன்பு புன்முறுவல் செய்து எரித்த, பேரறிஞராகிய சிவபெருமான் பெற்ற செல்வமே,
  • வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் தே(ம்) நாயகா
    தேவேந்திரன் மகளாய் அடைந்து வளர்த்த, கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத் தோப்பில் வாழும், தேவயானையின் நாயகனே,
  • எனத் துதித்த உத்தம வான் நாடர் வாழ
    என்றெல்லாம் போற்றித் துதித்த உத்தமமான தேவர்கள் வாழும்படி,
  • விக்ரமத் திருக் கழல் சேராத சூரனைத் துணித்து அடக்கி
    வல்லமை பொருந்திய உனது திருவடியைச் சிந்தித்துப் போற்றாத சூரனை வெட்டி அடக்கி,
  • அ வரை மோதி சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ
    அந்த கிரெளஞ்ச மலையைத் தாக்கி, சேறு போன்ற ரத்தம் பாய்வதால் கடலும் மேடிட்டு மலை போல் எழ,
  • மாறா நிசாசர குலத்தை இப்படி
    பகைத்து நின்ற அரக்கர் கூட்டத்தை இப்படியும் அப்படியுமாக
  • சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே.
    உடை வாளால் துண்டு துண்டாக அறுத்துத் தள்ளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com