திருப்புகழ் 1134 இருகுழை மீதோடி (பொதுப்பாடல்கள்)

தனதன தானான தானன
தனதன தானான தானன
தனதன தானான தானன ...... தனதான
இருகுழை  மீதோடி  மீளவும் 
கயல்களு  மாலால  காலமும் 
ரதிபதி  கோலாடு  பூசலு  ......  மெனவேநின் 
றிலகிய  கூர்வேல்வி  லோசன 
ம்ருகமத  பாடீர  பூஷித 
இளமுலை  மாமாத  ரார்வச  ......  முருகாதே 
முருகவிழ்  கூதாள  மாலிகை 
தழுவிய  சீர்பாத  தூளியின் 
முழுகிவி  டாய்போம  னோலயம்  ......  வரவோது 
முழுமதி  மாயாவி  காரமு 
மொழிவது  வாசாம  கோசர 
முகுளித  ஞானோப  தேசமு  ......  மருள்வேணும் 
அருமறை  நூலோதும்  வேதியன் 
இரணிய  ரூபாந  மோவென 
அரிகரி  நாராய  ணாவென  ......  ஒருபாலன் 
அவனெவ  னாதார  மேதென 
இதனுள  னோவோது  நீயென 
அகிலமும்  வாழ்வான  நாயக  ......  னெனவேகி 
ஒருகணை  தூணோடு  மோதிட 
விசைகொடு  தோள்போறு  வாளரி 
யுகிர்கொடு  வாராநி  சாசர  ......  னுடல்பீறும் 
உலகொரு  தாளான  மாமனும் 
உமையொரு  கூறான  தாதையும் 
உரைதரு  தேவாசு  ராதிபர்  ......  பெருமாளே. 
  • இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் ஆலாலகாலமும் ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று
    இரண்டு குண்டலங்களின் மீது ஓடித் தாக்கி மீள்வனவும், கயல் மீன்களும் ஆலகால விஷமும் போன்றவையும், ரதியின் கணவனான மன்மதனுடைய மலர் அம்புகள் செய்யும் கலகம் என்றும் கூறும்படி நின்று
  • இலகிய கூர் வேல் விலோசன
    விளங்கும் கூரிய வேலைப் போன்ற கண்கள் உடையவர்களாகி,
  • ம்ருகமத பாடீர பூஷித இள முலை மா மாதரார் வசம் உருகாதே
    கஸ்தூரி, சந்தனம் ஆகியவை அலங்கரிக்கும் இள மார்பகங்களை உடைய அழகிய விலைமாதர்களின் வசத்தில் பட்டு உருகாமல்,
  • முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின் முழுகி
    நறு மணம் வீசுகின்ற கூதாள மலர் மாலை தழுவும் (உனது) சிறப்பு வாய்ந்த திருவடிப் பொடிகளில் நான் முழுகி,
  • விடாய் போம் மனோலயம் வர ஓது முழு மதி
    எல்லாவிதமான ஆசைகளை ஒழிக்கக் கூடிய மன ஒடுக்கம் வரும்படிக் கற்பிக்க வல்ல முற்றின அறிவையும்,
  • மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர
    உலக மாயையின் துர்க்குணங்களை நீக்க வல்லதும், வாக்குக்கு எட்டாததாய்
  • முகுளித ஞான உபதேசமும் அருள் வேணும்
    அரும்பு விட்டு விளங்குவதுமான ஞான உபதேசத்தையும் தந்து எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.
  • அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என
    அருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா நமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது,
  • அரி கரி நாராயணா என ஒரு பாலன்
    ஹரி ஹரி நாராயணா நமோ என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை
  • அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என
    (நோக்கி இரணியன்) அவன் எவன், என்ன ஆதாரம், (இந்தத் தூணில் இருக்கிறானா) நீ சொல்லுக என்று கேட்க,
  • அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி ஒரு கணை தூணோடு மோதிட
    (பிரகலாதன்) எங்கள் நாயகன் உலகில் எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும், இரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய,
  • விசை கொடு தோள் போறு வாள் அரி உகிர் கொடு வாரா
    வேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க வடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து
  • நிசாசரன் உடல் பீறும் உலகு ஒரு தாள் ஆன மாமனும்
    அரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகம் எல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும்,
  • உமை ஒரு கூறான தாதையும்
    உமா தேவியை உடம்பில் ஒரு பாகத்தில் தன்னிடம் வைத்துள்ள தந்தையாகிய சிவபெருமானும்
  • உரை தரு தேவா சுர அதிபர் பெருமாளே.
    போற்றிப் புகழும் தேவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com