திருப்புகழ் · 1111நீரு நிலம் அண்டாத (பொதுப்பாடல்கள்)neerunilamaNdAdha
தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான ...... தனதான
Nangalappa Sharanam
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி ...... வடிவான
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி ...... யவையூடே
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.
பத உரைword meanings
- நீரு(ம்) நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி
நீரும் பூமியும் சம்பந்தப்படாது தழைத்து விளங்கும் (நாலிதழ்த் தாமரை ஆகிய மூலாதாரம்,* ஆறிதழ்த் தாமரையாகிய சுவாதிஷ்டானம், பத்து இதழ்த் தாமரையாகிய மணி பூரகம், பன்னிரண்டு இதழ்த் தாமரையாகிய அனாகதம், பதினாறு இதழ்த் தாமரையாகிய விசுத்தி, இரண்டு அல்லது மூன்று இதழ்த் தாமரையாகிய ஆக்ஞை ஆகிய) ஆதாரங்களின் வழியாக (சிவ யோக நெறியில்) படர்ந்து சென்று, - நீளம் அகலம் சோதி வடிவான
நீளம் அகலம் இவை எல்லை அற்று விளங்கும் ஜோதி சொரூபமான, - நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி
சிவ நேசத்தால் பெறப்படும் சிவமாதினை திருமணம் செய்து கொண்டது போல அந்தச் சிவச்சுடருடன் நேராகப் பொருந்தி, - உண் காதலுடன் மேவி
உள்ளத்தில் நீங்காத அன்புடன் இருந்து, - சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும்
பூமி அவை ஊடே
சூரியன், சந்திரன் ஆகியவர்களின் ஒளி எட்ட முடியாத பேரொளி பொருந்தும் அந்த ஜோதி மண்டல பூமியில், - தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட
தோகை உடைய மயிலைச் செலுத்தியவனாகிய முருகன் இவனே என்று நான் மகிழ்ந்து கூத்தாட, - சோதி அயிலும் தாரும் அருள்வாயே
உனது ஒளி வீசும் வேலையும் கடப்ப மாலையையும் தந்தருளுக. - வாரி அகிலம் கூச ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒடு
கடலின் எல்லாப் பகுதிகளும் கூசி நிலை குலையவும், ஆயிரம் படங்களை உடைய ஆதிசேஷன் வாய் பிளந்து வெளிப்பட்டு ஓடவும், - எண் பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே
(அது அங்ஙனம் ஓடும்) எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்கள் உதிர்வன போல (அப்பாம்பின்) உயர்ந்த ரத்தின மணிகள் உதிர்ந்து சிதறவும், - கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல்
கொடியோனே
அழகு ததும்பி ஆடுகின்ற சிறந்த மயிலைச் செலுத்தும் சேவல் கொடியை உடையவனே, - ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும்
பிரமனும், அவனுடைய தந்தையாகிய திருமாலும் தேடி நின்று (இன்னமும் காணாது), பாடிப் போற்றும் - ஆடல் அருணம் சோதி அருள் பாலா
திரு நடனம் புரிந்த செஞ்சோதியாகிய அண்ணாமலையார் அருளிய பாலனே, - ஆனை முகவன் தேடி ஓடியே அ(ண்)ண
யானைமுகனான கணபதி வள்ளி இருக்கும் இடத்தைத் தேடி ஓடியே வந்து நெருங்கும் அளவுக்கு - அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே.
அழகிய காதலாசையை வள்ளியின் மேல் கொண்ட ஜோதி வடிவமான பெருமாளே.
குறிப்புகள் · notes
- * இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன. 'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். 'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். 'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. 'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன. சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
- ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
- * 96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
- * In this song, several Siva-yOgA principles are explained: The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'. idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril; pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril; susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna'). If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.
