திருப்புகழ் · 1112சுட்டதுபோல் ஆசை (பொதுப்பாடல்கள்)suttadhupOlAsai
தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான ...... தனதான
Thiruppugazh Anbargal
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான ...... சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தார ...... வெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி ...... மதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோன ...... மடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோட ...... வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடி ...... யசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீர ...... தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமம றாது
பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.
பத உரைword meanings
- சுட்டதுபோல் ஆசை விட்டு
கையிலுள்ள ஒரு சூடான பொருளை கை எப்படி உதறுகிறதோ, அது போல ஆசைகளை நான் உதறித்தள்ளி, - உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி
உலக வாழ்வில் ஏற்படும் துயரங்கள் அற்ற ஞான சுக நிலையை நான் அடைந்து, - சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு
சொல்லுக்கும், மனத்திற்கும் எட்டாது நின்று, குணங்களே இல்லாத, - சுத்த நிராதார வெளிகாண
பரிசுத்தமான, சார்பற்றதாக விளங்கும் பர வெளியை நான் கண்டு, - மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார
மொட்டுக்கள் மலர்ந்த தாமரையாம் ஆறு ஆதார குண்டலினி சக்கரங்கள்* - முட்டவுமீதேறி மதிமீதாய்
அனைத்திலும், அவற்றைக் கடந்தும் இருப்பதுவும், அமுதைப் பொழியும் சந்திரனுக்கு மேலானதும் ஆன, - முப்பதும் ஆறாறு முப்பதும்வேறான
தொண்ணூற்றாறு** (30+36+30=96) தத்துவங்களுக்கும் வேறுபட்டதான - முத்திரையா மோனம் அடைவேனோ
அடையாள அறிகுறியாகிய மெளன நிலையை நான் அடைவேனோ? - எட்டவொணா வேதனத்தொடு கோ கோவெனப்பிரமா ஓட
தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், - வரைசாய
கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், - எற்றிய ஏழாழி வற்றிட
அலைகள் வீசும் ஏழு கடல்கள் வற்றிவிடவும், - மாறாய எத்தனையோ கோடி யசுரேசர் பட்டு
பகைமையோடு வந்த பல கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிபடவும், - ஒருசூர் மாள
ஒப்பற்ற சூரன் இறந்து படவும், - விக்ரம வேல் ஏவு பத்திருதோள் வீர
பராக்கிரமம் நிறைந்த வேலைச் செலுத்திய பன்னிரு தோள் வீரா, - தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம
தினைப்புனத்தைக் காவல் செய்த கற்புடை நாயகி வள்ளியின் தோள்களைத் தழுவும் உத்தமனே, - மாறாது பத்திசெய் வான் நாடர் பெருமாளே.
நிலைத்த மனதுடன் பக்தி செய்து தொழும் தேவர்களின் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
- ** 96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
- ** The 96 thathvAs (tenets) are as follows: 36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5. 5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos. 35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).
