திருப்புகழ் · 1104காதல் மோகம் தரும் (பொதுப்பாடல்கள்)

kAdhalmOgamtharum

தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் ...... தனதான
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண்
காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்
காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும்
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
தோநமோ கந்தஎன் ...... றுரையாதே
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
தாரம்வா சந்திசந் ...... தனநீடு
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
தானமா தெங்கள்பைம் ...... புனமேவும்
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
சேகரா தண்டையங் ...... கழல்பேணித்
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய்
    காம ஆசையை எழுப்பும் மாதர்களின் மார்பகங்கள் அலங்கார மலைகள் என்றும், வாய் செவ்விய (கொவ்வைக்) கனி என்றும்,
  • கண் காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம்
    கண்கள் ஆலகால விஷம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு என்றும்,
  • சுரும்பினம் வாழும் ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து
    வண்டினங்கள் வாழும் கூந்தல் மேகம் என்றும், செவ்விய சொற்கள் இனிக்கும் வெல்லம், தேன் என்றும் (உவமைகள் சொல்லி) சோர்வடைந்து,
  • ஓம் நமோ கந்தா என்று உரையாதே ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ
    ஓம் நமோ கந்தா என்று கூறாமல், அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்கள் செல்லும் வழியிலேயே போய் அவ்வழியையே கடைப்பிடித்து அலைச்சல் ஓய்வுறும் படியான ஒரு வழியையும் என் உள்ளம் எண்ணாதோ?
  • தாதகீ சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன(ம்) நீடு சாம வேதண்டம்
    தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை, நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில்,
  • வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும்
    கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள் வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய் பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும்
  • தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா
    குற்றமே இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே,
  • தண்டை அம் கழல் பேணி தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர் தம் பெருமாளே.
    பார்வதி தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits