தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ...... தனதான
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்
தந்தமா மதனலம் ...... விதமாக
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்
டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம்
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்
தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன்
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
- வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகமென் பந்திமா
மலர்சொரிந்து உடைசோர
வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்கள் சிதறுண்டு விழ, அணிந்துள்ள ஆடை நெகிழ, - வம்புசேர் கனிபொருந்தி இன்பவாய் அமுதருந்து அந்த மா
மதன் நலம் விதமாக விண்டு மேனிகள் துவண்டு
புதுமை வாய்ந்ததும், கனியின் சுவை கொண்டதும் ஆகிய வாயூறலைப் பருகுகின்ற அந்த சிறந்த மன்மத லீலையின் இன்பம் பலவிதத்திலும் வெளிவர, இருவர் உடல்களும் சோர்வடைந்து, - அன்றில்போல் உளம் இரண்டு ஒன்றுமாய் உறவு அழிந்து
அநுபோகம் விஞ்சவே தரும் இளங் கொங்கையார்
வினைகடந்து உன்றன்மேல் உருக என்று அருள்வாயே
அன்றில் பறவை போல இருவர் உள்ளமும் நன்றாக ஒன்றுபட்டு, காம நுகர்ச்சியை நிரம்பத் தருகின்ற இளமை வாய்ந்த மார்பகங்களை உடைய மாதர்களுடன் ஊடாடுவதை விட்டு, உன்னை நினைந்து உருக, எனக்கு என்று அருள் புரிவாய்? - பண்டு பாரினை அளந்து உண்டமால் மருக
முன்பு பூமியை (திரிவிக்கிரமனாக) அளந்தவரும், பூமியை (கண்ணனாக) உண்டவருமான திருமாலின் மருகனே, - செம் பைம் பொன்மா நகரில் இந்திரன்வாழ்வு பண்பெலா(ம்)
மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பினோர்
அகம் அமர்ந்திடுவோனே
செவ்விய பசுமையான சிறந்த பொன்னுலகத்தில் இந்திரனின் செல்வமும், அழகுச் சிறப்புக்கள் எல்லாமும் நிறைந்திருக்கும் மேலெழுந்து விளங்கும் தேவயானையை மணந்து, அன்புடனே ஒன்றுபட்ட மனத்தினனாக அமர்ந்து வீற்றிருப்போனே, - அண்டர்தாம் அதிபயங் கொண்டு வாடிட நெடுந் தண்டுவாள்
கொடுநடந்திடு சூரன் அங்கமானது பிளந்து எங்கும் வீரிட
வெகுண்டு அங்கை வேல் உற விடும் பெருமாளே.
தேவர்கள் மிக்க பயம் கொண்டு வாட்டம் அடையும்படி பெரிய தண்டாயுதம், வாள் இவைகளுடன் வந்த சூரனுடைய உடலைப் பிளந்து, எங்கும் கூச்சல் எழும்படி கோபித்து, அழகிய திருக்கையில் இருந்த வேல் சென்று தாக்கும்படியாகச் செலுத்தின பெருமாளே.