தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
குலவிய தோலத் ...... தியினூடே
குருதியி லேசுக் கிலமது கூடிக்
குவலயம் வானப் ...... பொருகாலாய்
உடலெழு மாயப் பிறவியி லாவித்
துறுபிணி நோயுற் ...... றுழலாதே
உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
துனதிரு தாளைத் ...... தரவேணும்
கடலிடை சூரப் படைபொடி யாகக்
கருதல ரோடப் ...... பொரும்வேலா
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா
சடையினர் நாடப் படர்மலை யோடித்
தனிவிளை யாடித் ...... திரிவோனே
தனிமட மானைப் பரிவுட னாரத்
தழுவும்வி நோதப் ...... பெருமாளே.
- குடல் இடை தீது உற்று இடை இடை பீறிக் குலவிய தோல்
அத்தியின் ஊடே
குடலினிடத்தே கெடுதல் அடைந்து, ஊடே ஊடே கிழிபட்டு இத்தகைய கோலத்துடன் விளக்கம் தரும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலினூடே, - குருதியிலே சுக்கிலம் அது கூடி
(மகளிர்) ரத்தத்துடன் விந்துவும் சேர்ந்து, - குவலயம் வான் அப்பு ஒரு காலாய் உடல் எழும் மாயப்
பிறவியில் ஆவித்து
மண், வான், நீர், ஒப்பற்ற காற்று (இவைகளுடன் தீ) ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வெளிவந்து பிறந்து, - உறு பிணி நோய் உற்று உழலாதே
சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து வீணாக அலைச்சல் உறாமல், - உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளைத்
தர வேணும்
உன்னைப் புகழ்ந்துரைக்கும் அடியவனாகிய எனக்கு, ஒளி மிக்கனவும், கடப்ப மலர் சேர்ந்துள்ளனவுமான, இரண்டு திருவடிகளைத் தந்து அருள வேண்டும். - கடல் இடை சூரப் படை பொடியாகக் கருதலர் ஓடப் பொரும்
வேலா
கடலின் இடையே சூரனுடைய படைகள் பொடிபட்டு அழியவும், பகைவர்கள் ஓட்டம் பிடிக்கவும் சண்டை செய்யும் வேலனே, - கதிர் விடு வேலைக் கதிரினில் மேவி கலை பல தேர்
முத்தமிழ் நாடா
கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ் சூரியனைப் போன்ற திருஞான சம்பந்தராய்த் தோன்றி பல கலை ஞானங்களையும் வேதங்களையும் உணர்ந்தவனாக முத்தமிழ் நாட்டில் விளங்கியவனே, - சடையினர் நாடப் படர் மலை ஓடித் தனி விளையாடித்
திரிவோனே
சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலை மலையில் ஓடி, தனியாக விளையாடித் திரிந்தவனே, - தனி மட மானைப் பரிவுடன் ஆரத் தழுவும் விநோதப்
பெருமாளே.
ஒப்பற்ற மடந்தையாகிய மான் போன்ற வள்ளியை அன்புடன் நன்றாக (மனம் குளிரத்) தழுவிய அழகு வாய்ந்த பெருமாளே.