தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
கருமய லேறிப் பெருகிய காமக்
கடலினில் மூழ்கித் ...... துயராலே
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
கழியும நாளிற் ...... கடைநாளே
எருமையி லேறித் தருமனும் வாவுற்
றிறுகிய பாசக் ...... கயிறாலே
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
கியலிசை பாடத் ...... தரவேணும்
திருமயில் சேர்பொற் புயனென வாழத்
தெரியல னோடப் ...... பொரும்வீரா
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற் ...... புயநாதா
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
புவியது சூழத் ...... திரிவோனே
புனமக ளாரைக் கனதன மார்பிற்
புணரும்வி நோதப் ...... பெருமாளே.
- கரு மயல் ஏறிப் பெருகிய காமக் கடலினில் மூழ்கித்
துயராலே
கொடிய ஆசை மிகுந்து பெருகி வளர்ந்த காமமாகிய கடலில் முழுகித் துயரம் அடைந்து, - கயல் விழியாரைப் பொருள் என நாடிக் கழியும்
அ(ந்)நாளில்
மீன் போன்ற கண்களைக் கொண்ட விலைமாதர்களை அடையத் தக்க பொருள் என்று தேடி விரும்பி, காலம் கழிக்கின்ற அந்த நாட்களில் - கடை நாளே எருமையில் ஏறித் தருமனும் வாவுற்று
இறுதி நாள் வர, எருமைக் கடா வாகனத்தில் ஏறி யமதர்மனும் வீட்டு வாசற்படி தாண்டி வந்து, - இறுகிய பாசக் கயிறாலே எனை வளையாமல்
அழுத்திக் கட்டிய பாசக் கயிற்றால் என்னை வளைத்து இழுக்காமல், - துணை நினைவேனுக்கு இயல் இசை பாடத் தரவேணும்
உன்னையே துணையாக நினைக்கின்ற எனக்கு, இயற்றமிழ் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்ல வரத்தைத் தந்தருள வேண்டும். - திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ(த்)தெரியலன்
ஓடப் பொரும் வீரா
மயில் போன்ற லக்ஷ்மிகரம் பொருந்திய அழகிய புயங்களை உடையவன் என்று சொல்லும்படி வாழ்ந்திருந்த அந்தப் பகைவனாகிய சூரன் புற முதுகு காட்டி ஓடும்படிச் சண்டை செய்த வீரனே, - செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன்
புய நாதா
இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாட்டுக்களால் ஆகிய பாமாலைகளும், செழுமை வாய்ந்த வேத மொழிகளும் மாலையாக அணிந்த அழகிய புயங்களைக் கொண்டவனே, - பொரு மயில் ஏறிக் கிரி பொடியாகப் புவி அது சூழத்
திரிவோனே
சண்டை செய்ய வல்ல மயில் மீது ஏறி, மலைகள் எல்லாம் பொடியாகும் படி பூமியை வலம் வந்தவனே, - புன மகளாரைக் கனதன மார்பில் புணரும் விநோதப்
பெருமாளே.
தினைப் புனத்தில் காவலில் இருந்த வள்ளியை, அவளது சிறப்பு மிக்க மார்பகங்களோடு, ஆரத் தழுவிய திருவிளையாடலைச் செய்த பெருமாளே.