திருப்புகழ் 1081 மடவியர் எச்சில் (பொதுப்பாடல்கள்)

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ...... தனதான
மடவிய  ரெச்சி  லுண்டு  கையில்முத  லைக்க  ளைந்து 
மறுமைத  னிற்சு  ழன்று  ......  வடிவான 
சடமிக  வற்றி  நொந்து  கலவிசெ  யத்து  ணிந்து 
தளர்வுறு  தற்கு  முந்தி  ......  யெனையாள்வாய் 
படவர  விற்சி  றந்த  இடமிதெ  னத்து  யின்ற 
பசுமுகி  லுக்கு  கந்த  ......  மருகோனே 
குடமுனி  கற்க  வன்று  தமிழ்செவி  யிற்ப  கர்ந்த 
குமரகு  றத்தி  நம்பு  ......  பெருமாளே. 
  • மடவியர் எச்சில் உண்டு கையில் முதலைக் களைந்து மறுமை தனில் சுழன்று
    விலைமாதர்களுடைய எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்கள் பொருட்டுச் செலவழித்து ஒழித்து, மறு பிறப்புக்கு ஏதுவான செயல்களில் அலைச்சல் உற்று,
  • வடிவான சடம் மிக வற்றி நொந்து கலவி செயத் துணிந்து தளர் உறுதற்கு முந்தி எனை ஆள்வாய்
    அழகாய் இருந்த உடம்பு வர வர இளைத்து, காய்ந்து வாடி, புணர்ச்சிச் செயல்களில் மீண்டும் ஈடுபடத் துணிந்து, நான் சோர்வு அடைவதற்கு முன்பாக என்னை நீ ஆண்டருள்க.
  • பட அரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற பசு முகிலுக்கு உகந்த மருகோனே
    படம் கொண்ட (ஆதிசேஷன் என்னும்) பாம்பாகிய படுக்கையை மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில் பள்ளி கொண்ட கரிய மேகம் போன்ற திருமாலுக்குப் பிரியமான மருகனே,
  • குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பு(ம்) பெருமாளே.
    அகத்திய முனிவர் கற்க*, அன்று தமிழ் ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி நம்பித் தொழும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com