தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவா ளொத்த ...... விழிமானார்
கடினபோ கத்த புளகவா ருற்ற
களபமார் செப்பு ...... முலைமீதே
உருகியான் மெத்த அவசமே வுற்ற
வுரைகளே செப்பி ...... யழியாதுன்
உபயபா தத்தி னருளையே செப்பு
முதயஞா னத்தை ...... அருள்வாயே
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
பகடுவாய் விட்ட ...... மொழியாலே
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
பழயமா யற்கு ...... மருகோனே
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே
முருகனே பத்த ரருகனே வெற்பு
முரியவேல் தொட்ட ...... பெருமாளே.
- கருதியே மெத்த விடம் எ(ல்)லாம் வைத்த கலக வாள் ஒத்த
விழி மானார்
மிகுந்த முன்யோசனையுடன் எல்லா விஷத்தையும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் - கடின போகத்த புளக வார் உற்ற களபம் ஆர் செப்பு முலை
மீதே
வன்மை கொண்டதும், போக இன்பம் தருவதும், புளகாங்கிதம் கொண்டதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான மார்பகத்தின் மீது - உருகி யான் மெத்த அவசமே உற்ற உரைகளே செப்பி
அழியாது
மனம் உருகி நான் மிகவும் வசம் இழந்த நிலையில் இருந்த பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல், - உன் உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை
அருள்வாயே
உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக. - பருவர(ரா)ல் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட
மொழியாலே
மிக்க துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, - பரிவினோடு உற்று அ(த்)திகிரி ஏவிட்ட ப(ழை)ழய மாயற்கு
மருகோனே
அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்கு மருகனே, - முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவு உற்ற
க்ருபைவேளே
இயற்கை மணம் வீசும் கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் மார்பை விரும்பி அணைந்த கருணை வேளே, - முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட
பெருமாளே.
முருகனே, பக்தர்களுக்கு அருகே நின்று உதவுபவனே, கிரவுஞ்ச மலை ஒடிந்து அழிய வேலைச் செலுத்திய பெருமாளே.