தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
திரிபுர மதனை யொருநொடி யதனி
லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே
சினமுடை யசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ...... விடுவோனே
பருவரை யதனை யுருவிட எறியு
மறுமுக முடைய ...... வடிவேலா
பசலையொ டணையு மிளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடலாமோ
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
முடையவர் பிறகு ...... வருவோனே
கனதன முடைய குறவர்த மகளை
கருணையொ டணையு ...... மணிமார்பா
அரவணை துயிலு மரிதிரு மருக
அவனியு முழுது ...... முடையோனே
அடியவர் வினையு மமரர்கள் துயரு
மறஅரு ளுதவு ...... பெருமாளே.
- திரிபுரம் அதனை யொருநொடி யதனில்
அசுரர்களின் திரிபுரத்தை ஒரே நொடியளவில் - எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே
பஸ்மம் ஆக்கி அருளிய சிவன் பெற்ற செல்வமே, - சினமுடை அசுரர் மனமது வெருவ
கோபம் கொண்ட அசுரர்களின் மனத்தில் அச்சம் தோன்ற - மயிலது முடுகி விடுவோனே
உன் மயிலினை வேகமாகச் செலுத்துவோனே, - பருவரை யதனை யுருவிட எறியும்
பெரிய கிரெளஞ்சமலையினை ஊடுருவும்படி எறிந்த - அறுமுக முடைய வடிவேலா
கூரிய வேலை உடைய ஆறுமுகனே, - பசலையொடு அணையும் இளமுலை மகளை
விரகத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இள மார்புள்ள என் மகளை - மதன்விடு பகழி தொடலாமோ
மன்மதன் விடும் மலரம்புகள் தொளைத்திடலாமோ? - கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
யானையின் அழகிய முகமும் பெருத்த வயிறும் - உடையவர் பிறகு வருவோனே
உடையவராம் வினாயகருக்குப் பின்பு பிறந்தவனே, - கனதனம் உடைய குறவர்தம் மகளை
சிறப்பும் செல்வமும் உடைய குறவர்களது மகள் வள்ளியை - கருணையொடு அணையும் மணிமார்பா
கருணையோடு தழுவும் அழகிய மார்பை உடையவனே, - அரவணை துயிலும் அரிதிரு மருக
பாம்புப் படுக்கையில் உறங்கும் ஹரியின் அழகிய மருமகனே, - அவனியும் முழுதும் உடையோனே
இந்த உலகம் அத்தனையும் சொந்தமாகக் கொண்டவனே, - அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற
அடியவர்கள் வினையும் அசுரர்கள் தரும் துன்பமும் அற்றுப்போகும்படியாக - அருளுதவு பெருமாளே.
திருவருளைத் தந்திடும் பெருமாளே.