திருப்புகழ் 1074 இசைந்த ஏறும் (பொதுப்பாடல்கள்)

தனந்த தானந் தனதன தானன ...... தனதான
இசைந்த  ஏறுங்  கரியுரி  போர்வையும்  ......  எழில்நீறும் 
இலங்கு  நூலும்  புலியத  ளாடையு  ......  மழுமானும் 
அசைந்த  தோடுஞ்  சிரமணி  மாலையு  ......  முடிமீதே 
அணிந்த  ஈசன்  பரிவுடன்  மேவிய  ......  குருநாதா 
உசந்த  சூரன்  கிளையுடன்  வேரற  ......  முனிவோனே 
உகந்த  பாசங்  கயிறொடு  தூதுவர்  ......  நலியாதே 
அசந்த  போதென்  துயர்கெட  மாமயில்  ......  வரவேணும் 
அமைந்த  வேலும்  புயமிசை  மேவிய  ......  பெருமாளே. 
  • இசைந்த ஏறும்
    விருப்பமுடன் ஏறுகின்ற ரிஷப வாகனமும்,
  • கரியுரி போர்வையும்
    கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும்,
  • எழில்நீறும்
    அழகிய திருநீறும்,
  • இலங்கு நூலும்
    விளங்குகின்ற பூணூலும்,
  • புலியத ளாடையும்
    புலித்தோல் ஆடையும்,
  • மழுமானும்
    கோடரியும், மானும்,
  • அசைந்த தோடும்
    காதுகளில் அசைந்தாடும் தோடுகளும்,
  • சிரமணி மாலையும்
    சடையிலே தரித்த அழகிய கொன்றை மாலையும்,
  • முடிமீதே அணிந்த ஈசன்
    தலைமுடி மீது அணிந்த ஈசனாம் சிவபெருமான்
  • பரிவுடன் மேவிய குருநாதா
    பரிவோடு போற்றிப் பரவிய குருநாதனே,
  • உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
    கர்வம் மிக்க சூரன் தன் சுற்றத்தாருடன் வேரற்றுப் போகும்படி கோபித்தவனே,
  • உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே
    விருப்போடு பாசக்கயிறை எடுத்து வந்த யமதூதர்கள் சோர்வு அடையாமல்
  • அசந்த போதென் துயர்கெட
    என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு
  • மாமயில் வரவேணும்
    சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும்.
  • அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
    அழகிய வேலினை தோளில் வைத்திருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com