தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி
உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா
உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா
சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
- கலந்த மாதும் கண் களி உற வரு(ம்) புதல்வோரும்
தான் மனைவியாகக் கொண்டு இணைந்த பெண்மணியும், கண்கள் மகிழ்ச்சி அடையும்படி ஓடி வருகின்ற குழந்தைகளும், - கலங்கிடார் என்று இன்பம் உறு உலகிடை கலி மேவி
கலக்கம் கொள்ளாது வாழ்வார்கள் என்று எண்ணி, இன்பத்துடன் பொருந்த வாழும் உலக வாழ்க்கையின் நடுவே துக்க நிலையான வறுமையை அடைந்து, - உலந்த காயம் கொண்டு உளம் உறு துயருடன் மேவா
தேய்ந்து அழியும் இந்த உடலுடனும், மனத்தில் கொண்ட துயரத்துடனும் இருக்கின்ற எனக்கு - உகந்த பாதம் தந்து உனை உரை செய அருள்வாயே
நான் மகிழ்ச்சி கொண்டு தியானிக்கும் உனது திருவடியைத் தந்து, உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு அருள் செய்வாயாக. - மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே
மலர்ந்த தாமரையில் உறையும் லக்ஷ்மியை அணைந்த திருமாலின் மருகனே, - மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய மணவாளா
(மிருகங்களைக்) கொல்லும் தொழிலைச் செய்யும் வேடர்களுடைய கொடிபோன்ற பெண்ணாகிய வள்ளியை மணந்த கணவனே, - சிலம்பினோடும் கிண்கிணி திசை தொறும் ஒலி வீச
சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்க, - சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே.
சிவந்த திருவடியும் தண்டையும் அழகு விளங்கும் பெருமாளே.