தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
புழுககில் களப மொளிவிடு தரள
மணிபல செறிய ...... வடமேருப்
பொருமிரு கலச முலையினை யரிவை
புனையிடு பொதுவின் ...... மடமாதர்
அழகிய குவளை விழியினு மமுத
மொழியினு மவச ...... வநுராக
அமளியின் மிசையி லவர்வச முருகி
அழியுநி னடிமை ...... தனையாள்வாய்
குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
குறுநிரை யருளி ...... யலைமோதுங்
குரைசெறி யுததி வரைதனில் விறுசு
குமுகுமு குமென ...... வுலகோடு
முழுமதி சுழல வரைநெறு நெறென
முடுகிய முகிலின் ...... மருகோனே
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு
முளரியின் முதல்வர் ...... பெருமாளே.
- புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட
மேருப் பொரும் இரு கலச முலையினை
புனுகு சட்டம், அகில், கலவைச் சந்தனம், ஒளி வீசும் முத்து மாலை, ரத்தின மாலை பலவும் நெருங்க, வட திசையில் உள்ள மேரு மலையை நிகர்க்கும் குடம் போன்ற மார்பகங்களிலும், - அரிவை புனை இடு பொதுவின் மட மாதர் அழகிய குவளை
விழியினும் அமுத மொழியினும்
பணிப் பெண்கள்அலங்கரிக்கும் இளம் பருவத்துப் பொது மகளிரின் அழகிய குவளை மலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும், - அவச அநுராக அமளியின் மிசையில் அவர் வசம் உருகி
அழியு(ம்) நின் அடிமை தனை ஆள்வாய்
தன் வசம் அழிந்துக் காமப் பற்றுடன் படுக்கை மீது அந்த விலைமாதர்கள் மேல் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய என்னை ஆண்டருள்வாயாக. - குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை
அருளி
புல்லாங்குழலின் இசையால் மிகவும் மயங்கி அஞ்சிய காராம் பசு முதலிய சிறிய பசுக் கூட்டத்துக்கு உதவி செய்து அருளி, - அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமு
குமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறு நெறு
என முடுகிய முகிலின் மருகோனே
அலை வீசுவதும், ஒலி நிரம்பச் செய்வதுமான கடல், மலை போல சுழன்று அலைகளை வீசி குமுகுமு குமு என்று பொங்கவும், உலகுடன் பூரண சந்திரன் சுழற்சி அடைய, மந்திர மலை நெறு நெறு என்று சுழலவும், விரைந்து (திருப்பாற் கடலைக்) கடைந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகோனே, - மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின்
முதல்வர் பெருமாளே.
மொகுமொகு மொகு என்று வண்டுகள் இசை பாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் பெருமாளே.