திருப்புகழ் 1068 ஒழு கூனிரத்தம் (பொதுப்பாடல்கள்)

தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
ஒழுகூ  னிரத்த  மொடுதோ  லுடுத்தி 
உயர்கால்  கரத்தி  ......  னுருவாகி 
ஒருதாய்  வயிற்றி  னிடையே  யுதித்து 
உழல்மாய  மிக்கு  ......  வருகாயம் 
பழசா  யிரைப்பொ  டிளையா  விருத்த 
பரிதாப  முற்று  ......  மடியாமுன் 
பரிவா  லுளத்தில்  முருகா  எனச்சொல் 
பகர்வாழ்  வெனக்கு  ......  மருள்வாயே 
எழுவா  னகத்தி  லிருநாலு  திக்கில் 
இமையோர்  தமக்கு  ......  மரசாகி 
எதிரேறு  மத்த  மதவார  ணத்தில் 
இனிதேறு  கொற்ற  ......  முடன்வாழுஞ் 
செழுமா  மணிப்பொ  னகர்பாழ்  படுத்து 
செழுதீ  விளைத்து  ......  மதிள்கோலித் 
திடமோ  டரக்கர்  கொடுபோ  யடைத்த 
சிறைமீள  விட்ட  ......  பெருமாளே. 
  • ஒழுகு ஊன் இரத்தமொடு தோலுடுத்தி
    வழியும் மாமிசமும், ரத்தமும் சேர்ந்து, தோலால் மூடப்பட்டு,
  • உயர்கால் கரத்தின் உருவாகி
    உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி,
  • ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
    ஒரு தாயினுடைய வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து,
  • உழல்மாய மிக்கு வருகாயம்
    அலைச்சலைத் தரும் மாயம் மிகுந்து வருகின்ற இந்த உடலானது
  • பழசாய் இரைப்பொடு இளையா
    பழமையடைந்து மூப்புற்று, மூச்சு வாங்குவதால் சோர்வு அடைந்து
  • விருத்த பரிதாப முற்று மடியாமுன்
    கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக,
  • பரிவால் உளத்தில் முருகா எனச்சொல்
    அன்பு கலந்த உள்ளத்தோடு முருகா என்ற உன் திருப் பெயரைக் குறிக்கும் சொல்லை
  • பகர்வாழ்வெனக்கும் அருள்வாயே
    நான் சொல்லும்படியான வாழ்வை எனக்கு நீ அருள்வாயாக.
  • எழுவானகத்தி லிருநாலு திக்கில்
    விளங்கும் விண்ணுலகிலும், எட்டுத் திசையிலும் உள்ள
  • இமையோர் தமக்கும் அரசாகி
    தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி,
  • எதிரேறு மத்த மதவாரணத்தில்
    அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாம் ஐராவதத்தின் மீது
  • இனிதேறு கொற்றமுடன்வாழும்
    இன்பகரமாக ஏறிவரும் வெற்றிநிலையுடன் வாழ்ந்த
  • செழுமா மணிப்பொன் நகர்பாழ் படுத்து
    செழிப்பான அழகிய பொன்னுலகாம் அமராவதியைப் பாழ்படுத்தி,
  • செழுதீ விளைத்து மதிள்கோலி
    பெரும் தீயிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து,
  • திடமோடு அரக்கர் கொடுபோய் அடைத்த
    வலிமையுடன் அரக்கர்கள் கொண்டுபோய்ச் சிறையிலிட்ட
  • சிறைமீள விட்ட பெருமாளே.
    தேவர்களின் சிறையை நீக்கி, அவர்களை விடுவித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com