தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
முருகாய் மனக்க ...... வலையோடே
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
தலைபோய் வெளுத்து ...... மரியாதே
இருபோது மற்றை யொருபோது மிட்ட
கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கு
மியல்போத கத்தை ...... மொழிவாயே
அருமாத பத்தஅமரா பதிக்கு
வழிமூடி விட்ட ...... தனைமீள
அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனே பிடித்து ...... முடியாதே
திருவான கற்ப தருநா டழித்து
விபுதேசர் சுற்ற ...... மவைகோலித்
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
சிறைமீள விட்ட ...... பெருமாளே.
- கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மனக்
கவலையோடே
தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகப் பிறந்து, இளமைப் பருவம் அடைந்து, மனக் கவலையுடன் - கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து
மரியாதே
படிக்க வேண்டிய கலை நூல்களை உண்மை அறிவின்றிக் குழறிப் படித்து, வாழ் நாளின் நடுவில் கறுத்திருந்த தலை மயிர் வெளுத்து, வீணனாக இறந்து போகாமல், - இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி
மிக்க புனல் மூழ்கி
நாள் தோறும், காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் (சிவ யோக நெறியால்) வளர்த்த மூலாக்கினியில்* முழுகுவதற்கும், (என்னுள் இருக்கும்) சிறந்த மதி மண்டலச் சுத்த கங்கையில் (சிவயோக நிஷ்டையில்) முழுகுவதற்கும், - இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை
மொழிவாயே
சாகா வரம் பெற்ற (அகத்தியர் முதலிய) முனிவர்கள் போற்றும் தகுதியுள்ள மந்திர உபதேசத்தை எனக்கும் உபதேசித்து அருள்வாயாக. - அரும் ஆதபத்த அமரா பதிக்கு வழி மூடி விட்டு
அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை முதலில் மூடிவிட்டு, - அதனை மீள அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே
பிடித்து முடியாதே
அந்தப் பொன்னுலகை மறுபடியும் தாக்கி, ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனான ஆயிரம் கண்களை உடைய இந்திரனை உடனே பிடிக்க முயன்று, அங்ஙனம் பிடிக்க முடியாமல் போன காரணத்தால், - திருவான கற்ப தரு நாடு அழித்து
செல்வம் நிறைந்த, கற்பக விருட்சத்தைக்கொண்ட தேவர் உலகை தீயிட்டுப் பாழ் படுத்தி, - விபு தேசர் சுற்றம் அவை கோலி(த்து)
தேவ சிரேஷ்டர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, - திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட
பெருமாளே.
வலிமையுடன் அசுரர்கள் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் அந்தத் தேவர்களை மீட்டு விடுவித்து (மீண்டும் அவர்களது நாட்டில்) குடிபுகச் செய்த பெருமாளே.