திருப்புகழ் 1064 குருதி ஒழுகி (பொதுப்பாடல்கள்)

தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குருதி  யொழுகி  யழுகு  மவல 
குடிலை  யினிது  ......  புகலாலே 
குலவு  மினிய  கலவி  மகளிர் 
கொடிய  கடிய  ......  விழியாலே 
கருது  மெனது  விரக  முழுது 
கலக  மறலி  ......  அழியாமுன் 
கனக  மயிலி  னழகு  பொழிய 
கருணை  மருவி  ......  வரவேணும் 
பரிதி  சுழல  மருவு  கிரியை 
பகிர  எறிசெய்  ......  பணிவேலா 
பணில  வுததி  யதனி  லசுரர் 
பதியை  முடுக  ......  வரும்வீரா 
இரதி  பதியை  யெரிசெய்  தருளு 
மிறைவர்  குமர  ......  முருகோனே 
இலகு  கமல  முகமு  மழகு 
மெழுத  வரிய  ......  பெருமாளே. 
  • குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை இனிது புகலாலே குலவும்
    ரத்தம் ஒழுகி அழுகிப் போகும் துன்பத்துக்கு இடமான குடிசையாகிய இந்த உடலை இனிமையாகப் பேசும் சொற்களைக் கொண்டு நெருங்கி உறவாடி,
  • இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே கருதும்
    இனிய புணர்ச்சி இன்பம் தரும் பொது மகளிருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே எண்ணுகின்ற
  • எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன்
    என்னுடைய காம இச்சை முற்றிலுமாக என்னுடன் போருக்கு எழும் யமன் அழிப்பதற்கு முன்பாக,
  • கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும்
    பொன்னிறமான மயிலின் அழகு பொலிந்து ஒழுக (நீ) அருள் வைத்து வந்தருள வேண்டும்.
  • பரிதி சுழல மருவு கிரியை பகிர எறி செய் பணி வேலா
    சூரியன் சுழற்சி அடையும்படி, கிரெளஞ்ச மலை பிளவுபடச் செலுத்திய தொழில் அமைந்த வேலினை உடையவனே,
  • பணில உததி அதனில் அசுரர்பதியை முடுக வரும் வீரா
    சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரனை ஓட்டி விரட்ட வந்த வீரனே,
  • இரதி பதியை எரி செய்து அருளும் இறைவர் குமர முருகோனே
    ரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய குமரனே, முருகனே,
  • இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே.
    விளங்கும் தாமரை போன்ற முகமும், அதன் அழகும் எழுதுதற்கு முடியாதவையான பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com