தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
மறலி போற்சில நயன வேற்கொடு
மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும்
வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே
விழுவி னாற்களை யெழும தாற்பெரு
வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய்
மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே
மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே
குறவர் காற்புன அரிவை தோட்கன
கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர்
குலைய மாக்கட லதனி லோட்டிய
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
- மறலி போல் சில நயன வேல் கொடு
யமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தால் (விலைமாதர் தாக்குவதாலே) - மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும் வகையும்
மார்க்கமும் மறமும் மாய்த்திட வாறு ஆராயாதே
காம மயக்கில் மனம் முழுகி, மூங்கில் போன்ற இதமான தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காம சாஸ்திரத்தைப் படிக்கும் குணத்தையும், அதிலேயே ஈடுபடம் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் போக்க வல்ல வழியை இன்னதென்று அறியாமல், - போம் ஆறா திடம் தீரம் விறலும் மேல் பொலி அறிவும்
ஆக்கமும் வேறாய்
போகின்ற (பழைய) வழியிலேயே நான் போய், மனோ திடமும், வலிமையும், வீரமும், மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி, - நீர் ஏறாதே ஓர் மேடாய் வினை ஊடே விழுவினால் களை
எழும் அதால்
நீர் ஏற முடியாத ஒரு மேடு எப்படியோ அப்படி என் நிலை என் வினைகளுக்கு இடையே விழுவதால், (ஓயாது பிறப்பு இறப்பு என்னும்) களைப்பு உண்டாவதால், - பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய்
பெரிய வீரனே, என்னைக் கண் பார்த்து அருள்வாய், நான் வீணாக இவ்வுலகில் காலம் கழிக்காமல் என்னை ஆண்டு அருள்வாயாக. - மறலி சாய்த்தவர் இறை பராக்ரம மால் காணாதே மாதோடே
வாழ்பவர் சேயே
யமனை (காலால் உதைத்துச்) சாய்த்தவர், இறைவர், வீரம் பொருந்திய திருமாலாலும் காணப் படாதவராய், (தாய்) பார்வதியுடன் வாழ்பவரான சிவபெருமானின் குழந்தையே, - மறு இலா திருவடிகள் நாள் தோறும் வாயார் நாவால்
மாறாதே ஓதினர் வாழ்வே
குற்றம் இல்லாத திருவடிகளை தினமும் வாயார நாவால் தவறாமல் ஓதுபவர்களின் செல்வனே, - குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா
குறவர்களிடத்தே வளர்ந்த, தினைப் புனம் காத்த மாதாகிய வள்ளியின் தோளும், பருத்த மலை போன்ற மார்பகங்களும் அணைந்த திருமார்பனே, - கூர் வேலாலே அசுரேசர் குலைய மா கடல் அதனில் ஓட்டிய
கோவே
அசுரர்களின் தலைவர்களாகிய சூரன் முதலியோர் அழிந்துபட, பெரிய கடலிடையே ஓட்டி விரட்டிய தலைவனே, - தேவே வேளே வானோர் பெருமாளே.
தெய்வமே, செவ்வேளே, தேவர்களின் பெருமாளே.