தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர்
மனது போற்கரு கினகு வாற்குழல்
வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ
பருகு பாற்கடல் முருகு தேக்கிய
பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ
பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி
பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ
அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ
ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி
அவுணர் கூப்பிட வுததி தீப்பட
ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக்
குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய
கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக்
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
- வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ
சேலோ மானோ எனும் மாதர்
எங்கள் வீட்டுக்கு வருக என்று அழைக்கும் சாமர்த்தியசாலிகளின் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்னும்படியான விலைமாதர்களுடைய - மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா
மாயோன் வடிவேயோ
மனதைப் போன்று கருமை நிறமான அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், - பருகு பாற் கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ
வானோர் அமுதேயோ பவள வாய் பனி மொழி எனா
உண்ணத்தக்க பாற்கடலில் உள்ளதும், நற்சுவை நிறைந்ததுமான பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், - கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ
பாட்டுக்களைப் பாடி அடி நாயாகிய நான் ஈடேறாமல் அழிந்து போவேனோ? - அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார்
வாழ்வே
அருகில் இருந்து பார்வதி மனம் கசிந்து உருகிக் கருதி நோக்க, ஒரு கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபிரானின் செல்வமே, - கோகோ என ஏகி அவுணர் கூப்பிட உததி தீப் பட
கோகோ என்று அசுரர்கள் அலறும்படி (போர்க்களத்துக்குச்) சென்று, அவர்கள் அலறிக் கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், - ஆகா சூரா போகாதே மீள் என ஓடி குருகு பேர்க் கிரி
உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி
ஹா ஹா சூரனே, போகாதே, இப்படி மீண்டும் வா என்று அவன் பின் ஓடி, கிரெளஞ்சம் என்னும் பேரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி செலுத்திய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் செய்து, - குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே
வஜ்ராயுதம் ஏந்திய அரசனாகிய இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவனே, - தேவே வேளே வானோர் பெருமாளே.
தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே.