திருப்புகழ் · 1065துயரம் அறு நின் (பொதுப்பாடல்கள்)thuyaramaRunin
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
Annamalaiyar Musical
துயர மறுநின் வறுமை தொலையு
மொழியு மமிர்த ...... சுரபானம்
சுரபி குளிகை யெளிது பெறுக
துவளு மெமது ...... பசிதீரத்
தயிரு மமுது மமையு மிடுக
சவடி கடக ...... நெளிகாறை
தருக தகடொ டுருக எனுமி
விரகு தவிர்வ ...... தொருநாளே
உயரு நிகரில் சிகரி மிடறு
முடலு மவுணர் ...... நெடுமார்பும்
உருவ மகர முகர திமிர
வுததி யுதர ...... மதுபீற
அயரு மமரர் சரண நிகள
முறிய எறியு ...... மயில்வீரா
அறிவு முரமு மறமு நிறமு
மழகு முடைய ...... பெருமாளே.
பத உரைword meanings
- துயரம் அறு(ம்) நின் வறுமை தொலையும்
துன்பமெல்லாம் ஒழியும். உனது தரித்திரம் நீங்கும். - மொழியும் அமிர்த சுர பானம் சுரபி குளிகை எளிது பெறுக
பிரசித்தி பெற்ற அமுதமாகிய தேவர் பருகும் உணவும், காமதேனுவும், (உலோகங்களைப் பொன்னாக்க வல்ல மந்திர சக்தி உள்ள) மாத்திரைகளையும், சுலபமாக நீ பெற முடியும். - துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் இடுக
வாடுகின்ற எம்முடைய பசி அடங்கும்படியாக தயிரும் சோறும் எமக்கு இட்டால் அதுவே போதுமானது. அதைத் தந்து உதவுக. - சவடி கடக நெளி காறை தருக தகடொடு உறுக
பொன் சரடு, கங்கணம், மோதிரம், (பொன்னாலாகிய) கழுத்து அணி இவைகளைத் தர வல்ல தாயித்து மந்திரத் தகட்டை (நான் தருவேன், அதை நீ) பெற்றுக் கொள்க. - எனும் இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே
என்று கூறும் (கபட ரசவாதிகளின்) இந்த வகையான தந்திர மொழிகளிலிருந்து தப்பும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? - உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு
மார்பும் உருவ
உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரெளஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, - மகர முகர திமிர உததி உதரம் அது பீற
மகர மீன்கள் உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது வயிற்றின் உட்பாகம் கிழிய, - அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா
சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச் செலுத்திய வேல் வீரனே. - அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய
பெருமாளே.
ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமாளே.
