திருப்புகழ் 1053 அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அதல  சேட  னாராட  அகில  மேரு  மீதாட 
அபின  காளி  தானாட  ......  அவளோடன் 
றதிர  வீசி  வாதாடும்  விடையி  லேறு  வாராட 
அருகு  பூத  வேதாள  ......  மவையாட 
மதுர  வாணி  தானாட  மலரில்  வேத  னாராட 
மருவு  வானு  ளோராட  ......  மதியாட 
வனச  மாமி  யாராட  நெடிய  மாம  னாராட 
மயிலு  மாடி  நீயாடி  ......  வரவேணும் 
கதைவி  டாத  தோள்வீம  னெதிர்கொள்  வாளி  யால்நீடு 
கருத  லார்கள்  மாசேனை  ......  பொடியாகக் 
கதறு  காலி  போய்மீள  விஜய  னேறு  தேர்மீது 
கனக  வேத  கோடூதி  ......  அலைமோதும் 
உததி  மீதி  லேசாயு  முலக  மூடு  சீர்பாத 
உவண  மூர்தி  மாமாயன்  ......  மருகோனே 
உதய  தாம  மார்பான  ப்ரபுட  தேவ  மாராஜ 
னுளமு  மாட  வாழ்தேவர்  ......  பெருமாளே. 
  • அதல சேடனார்
    (பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும் ஆதிே ஷன்
  • ஆட
    நடனம் ஆடவும்,
  • அகில மேரு மீதாட
    பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும்,
  • அபின (அபின்ன)
    மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு) ஒற்றுமையாக
  • காளி தானாட
    காளி தான் ஆடவும்,
  • அவளோ(டு) அன்(று) அதிர
    அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி
  • வீசி வாதாடும்
    (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி போட்டியிட்டவரும்
  • விடையில் ஏறுவார் ஆட
    ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும்,
  • அருகு பூத வேதாளம் அவையாட
    அருகில் பூதங்களும் பேய்களும் ஆடவும்,
  • மதுர வாணி தானாட
    இனிமை மிக்க சரஸ்வதியும் ஆடவும்,
  • மலரில் வேதனார் ஆட
    தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும்,
  • மருவு வானு ளோராட
    அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும்,
  • மதியாட
    சந்திரன் ஆடவும்,
  • வனஜ மாமி யாராட
    தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும்,
  • நெடிய மாம னாராட
    விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும்,
  • மயிலும் ஆடி
    நீ ஏறிவரும் மயிலும் ஆடி,
  • நீ ஆடி வரவேணும்
    நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்*
  • கதை விடாத தோள் வீமன்
    கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன்
  • எதிர்கொள் வாளியால்
    எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில்
  • நீடு கருதுலார்கள்
    பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்)
  • மாசேனை பொடியாக
    பெரிய சேனை பொடிபட (உதவியவரும்),
  • கதறு காலி போய்மீள
    கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்),
  • விஜயன் ஏறு தேர்மீது
    அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து,
  • கனக வேத கோடூதி
    தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும்,
  • அலைமோதும் உததி மீதிலே
    அலை வீசும் பாற்கடல் மீதிலே
  • சாயும்
    (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும்,
  • உலக மூடு சீர்பாத
    (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும்,
  • உவணம் ஊர்தி
    கருடனை வாகனமாகக் கொண்டவரும்,
  • மாமாயன் மருகோனே
    ஆன மாமாயன் திருமாலின் மருமகனே
  • உதய தாம மார்பான
    அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய
  • ப்ரபுடதேவ மாராஜ
    (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின்
  • உளமும் ஆட
    உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம்
  • வாழ் தேவர் பெருமாளே.
    அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com