தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம்
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி ...... தருபாலா
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்
இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே
அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக
மதிர நாக மோரேழு ...... பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.
- குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை
கோழை மாசு ஊறு குழி நீர் மேல் குமிழி போல நேராகி
அழியு(ம்) மாயை ஆதார(ம்)
ரத்தம், மூளை, மாமிசம், நாற்றம் மிக்க மலம் இவை நீங்காததும், தோலால் மூடியதுமான இந்தக் குடிசையாகிய உடல், கோழையும் மற்ற அழுக்குகள் ஊறியுள்ள ஒரு நீர்க் குமிழி போன்று உடனே அழிகின்ற ஒரு பொய்த் தோற்றமான பற்றுக் கோடாக நினைக்கப்படும். - குறடு பாறு நாய் கூளி பல காகம் பருகு காயமே பேணி
அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே
இறந்த பின், இறைச்சியைக் கொத்தும் பட்டடை மரத் துண்டாக வைத்து, பருந்துகளும், நாய்களும், பேய்களும், பல காகங்களும் உண்ணும் இத்தகைய உடலை விரும்பிப் பேணி அறிவில்லாத நான் வீணாகப் பூமியில் முழுகியவன். - போது தளிர் வீசிப் பரவு நாடக ஆசார கிரியையாளர்
காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே
மலர்களையும் வில்வம் போன்ற இலைகளையும் உனக்கு இட்டுப் பணிந்து, போற்றப் படுகின்ற ஒரு கூத்துப் போன்ற பணியாகிய ஆசாரப் பணியை மேற்கொண்டுள்ள கிரியையாளர்கள் காண முடியாத மேலான ஞான வீடு எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். - எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமய மாது
மா சூலி தரு பாலா
நெருப்புப் போன்ற திருமேனியில் திரு நீறு விளங்கும் பரமராகிய சிவபெருமானின் (இடது) பாகத்தில் வாழ்கின்றவளும், இமய மலை அரசனின் பெண்ணும், சிறந்த சூலாயுதத்தை ஏந்தியவளுமான பார்வதி ஈன்ற குழந்தையே, - எழுமை ஈறு காண் நாதர் முநிவரோடு வான் நாடர்
இசைகளோடு பாரா(ட்)ட மகிழ்வோனே
எழு வகைத் தோற்றத்தின் முடிவையும் கண்டு உணர்ந்த (அகத்தியர் முதலான) நாதர்களாகிய முனிவர்களும், வானில் உள்ள தேவர்களும் பாரா(ட்)ட மகிழ்கின்றவனே, - அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம்
ஓர் ஏழு பொடியாக அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட
அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே.
ஆதிசேஷனும், பெரிய மேரு மலையும், மகர மீன்கள் உள்ள கடலும், பூ லோகமும் அதிர்ச்சி கொள்ளவும், (சூரனின்) ஏழு மலைகளும் பொடியாகவும், பேய்கள், பூதங்கள், சிறந்த காளி ஆகியோர் போர்க்களத்தில் கூத்தாடவும், அசுரர்கள் மடியவும் வேலைச் செலுத்திய பெருமாளே.