திருப்புகழ் 1052 மன கபாட (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
மனக  பாட  பாடீர  தனத  ராத  ராரூப 
மதன  ராச  ராசீப  ......  சரகோப 
வருண  பாத  காலோக  தருண  சோபி  தாகார 
மகளி  ரோடு  சீராடி  ......  யிதமாடிக் 
குனகு  வேனை  நாணாது  தனகு  வேனை  வீணான 
குறைய  னேனை  நாயேனை  ......  வினையேனைக் 
கொடிய  னேனை  யோதாத  குதலை  யேனை  நாடாத 
குருட  னேனை  நீயாள்வ  ......  தொருநாளே 
அநக  வாம  னாகார  முநிவ  ராக  மால்தேட 
அரிய  தாதை  தானேவ  ......  மதுரேசன் 
அரிய  சார  தாபீட  மதனி  லேறி  யீடேற 
அகில  நாலு  மாராயு  ......  மிளையோனே 
கனக  பாவ  னாகார  பவள  கோம  ளாகார 
கலப  சாம  ளாகார  ......  மயிலேறுங் 
கடவு  ளேக்ரு  பாகார  கமல  வேத  னாகார 
கருணை  மேரு  வேதேவர்  ......  பெருமாளே. 
  • மனகபாட
    கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும்,
  • பாடீர தன தராதரா ரூப
    சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும்,
  • மதன ராச ராசீப சரகோப
    மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி,
  • வருண பாதக அலோக
    குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும்,
  • தருண சோபித ஆகார
    இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான
  • மகளிரோடு சீராடி யிதமாடிக் குனகுவேனை
    பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும்,
  • நாணாது தனகுவேனை
    வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும்,
  • வீணான குறையனேனை
    நாளை வீணாக்கும் குறையை உடையவனும்,
  • நாயேனை வினையேனைக் கொடியனேனை
    நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும்,
  • ஓதாத குதலையேனை
    உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும்,
  • நாடாத குருடனேனை
    உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும்
  • நீயாள்வ தொருநாளே
    நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா?
  • அநக வாமனாகார முநிவராக மால்தேட
    பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட
  • அரிய தாதை தானேவ மதுரேசன்
    அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட
  • அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற
    அருமையான சரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில்* ஏறி,
  • அகில நாலும் ஆராயும் இளையோனே
    நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே,
  • கனக பாவனாகார பவள கோமளாகார
    பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே,
  • கலப சாமளாகார மயிலேறும் கடவுளே
    தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே,
  • க்ருபாகார கமல வேதனாகார
    அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே,
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com