திருப்புகழ் 1051 நிலவில் மாரன் (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
நிலவில்  மார  னேறூதை  யசைய  வீசு  மாராம 
நிழலில்  மாட  மாமாளி  ......  கையின்மேலாம் 
நிலையில்  வாச  மாறாத  அணையில்  மாத  ராரோடு 
நியதி  யாக  வாயார  ......  வயிறார 
இலவி  லூறு  தேனூறல்  பருகி  யார  வாமீறி 
யிளகி  யேறு  பாடீர  ......  தனபாரம் 
எனது  மார்பி  லேமூழ்க  இறுக  மேவி  மால்கூரு 
கினுமு  னீப  சீர்பாத  ......  மறவேனே 
குலவி  யோம  பாகீர  திமிலை  நாதர்  மாதேவர் 
குழைய  மாலி  காநாக  ......  மொடுதாவிக் 
குடில  கோம  ளாகார  சடில  மோலி  மீதேறு 
குமர  வேட  மாதோடு  ......  பிரியாது 
கலவி  கூரு  மீராறு  கனக  வாகு  வேசூரர் 
கடக  வாரி  தூளாக  ......  அமராடுங் 
கடக  போல  மால்யானை  வனிதை  பாக  வேல்வீர 
கருணை  மேரு  வேதேவர்  ......  பெருமாளே. 
  • நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் மாட மா மாளிகையின் மேலாம் நிலையில் வாச(ம்) மாறாத அணையில்
    நிலவின் வெளிச்சத்தில், மன்மதன் ஏறிவரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலை நிழலில், மாடங்கள் கூடிய சிறந்த மாளிகையில் மேல் உள்ள மாடத்தில், நறு மணம் நீங்காத படுக்கையில்
  • மாதராரோடு நியதியாக வாயார வயிறார இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி
    பெண்களோடு, காலம் தவறாத ஒழுக்கத்துடன், வாய் நிரம்பவும், வயிறு நிரம்பவும், இலவம் பூப்போன்ற சிவந்த வாயிதழில் ஊறி வருகின்ற தேன் போல் இனிக்கும் ஊறலை உண்டு, நிரம்பிய என் ஆசை அளவு கடந்து பொங்கி எழ,
  • இளகி ஏறு பாடீர தன பாரம் எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே
    நெகிழ்ந்து, முற்பட்டு எழுந்துள்ளதும், சந்தனம் அணிந்துள்ள தனபாரம் என்னுடைய மார்பில் அழுந்தி முழுகும்படி கட்டி அணைத்து மோகம் மிகுந்திருப்பினும், உன்னுடைய கடம்பு அணிந்த அழகிய திருவடிகளை மறக்க மாட்டேன்.
  • குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர
    சிறந்த ஆகாய கங்கையைச் சூடியுள்ள தலைவர் மகா தேவர் (ஆகிய சிவ பெருமான்) மனம் மகிழ்ச்சியில் மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி, வளைந்துள்ள அழகிய வடிவுள்ளதான ஜடாபார முடியின் மீது தவழ்ந்து ஏறும் குழந்தைக் குமரனே,
  • வேட மாதோடு பிரியாது கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே
    குறப் பெண்ணாகிய வள்ளியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் பன்னிரண்டு பரந்த தோள்களை உடையவனே,
  • சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர
    சூரர்களுடைய சேனைக்கடல் பொடியாகும்படி சண்டை செய்கின்றவனே, மதம் பெருகும் கன்னங்களை உடைய சிறந்த வெள்ளை யானையாகிய ஐராவதம் வளர்த்த மாதாகிய தேவயானையின் பங்கனே, வேல் வீரனே,
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com