திருப்புகழ் 1050 தொட அடாது (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
தொடஅ  டாது  நேராக  வடிவு  காண  வாராது 
சுருதி  கூறு  வாராலு  ......  மெதிர்கூறத் 
துறையி  லாத  தோராசை  யிறைவ  னாகி  யோரேக 
துரிய  மாகி  வேறாகி  ......  யறிவாகி 
நெடிய  கால்கை  யோடாடு  முடலின்  மேவி  நீநானு 
மெனவு  நேர்மை  நூல்கூறி  ......  நிறைமாயம் 
நிகரில்  கால  னாரேவ  முகரி  யான  தூதாளி 
நினைவொ  டேகு  மோர்நீதி  ......  மொழியாதோ 
அடல்கெ  டாத  சூர்கோடி  மடிய  வாகை  வேலேவி 
யமர்செய்  வீர  ஈராறு  ......  புயவேளே 
அழகி  னோடு  மானீனு  மரிவை  காவ  லாவேதன் 
அரியும்  வாழ  வானாளு  ......  மதிரேகா 
கடுவி  டாக  ளாரூப  நடவி  நோத  தாடாளர் 
கருதி  டார்கள்  தீமூள  ......  முதல்நாடுங் 
கடவு  ளேறு  மீதேறி  புதல்வ  கார  ணாவேத 
கருணை  மேரு  வேதேவர்  ......  பெருமாளே. 
  • தொட அடாது நேராக வடிவு காண வாராது
    தொடுதற்கு முடியாததாய், நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாததாய்,
  • சுருதி கூறுவாராலும் எதிர் கூற துறை இ(ல்)லாதது
    வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு வழி இல்லாததாய்,
  • ஓர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி
    நமது விருப்பத்துக்கு உரிய கடவுளாய், ஒப்பற்று ஒரே பரம் பொருளாக நிற்பதாய், விழிப்பு - உறக்கம் - கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பதுவாய், பிறிதாய், அறிவாய்,
  • நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி
    நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு,
  • நீ நானும் எனவு(ம்) நேர்மை நூல் கூறி நிறை மாயம்
    நீ என்றும், நான் என்றும் துவைதமாகக் கூறும் நிலைமையானது நூல்களால் கூறப்பட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (யாது என்பதையும்),
  • நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி
    ஒப்பில்லாத யமனார் ஏவ, ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள்
  • நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ
    மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?
  • அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர
    வலிமை கெடாத கோடிக் கணக்கான சூரர்கள் இறக்க, வெற்றி வலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த வீரனே,
  • ஈராறு புய வேளே
    பன்னிரண்டு புயங்களை உடைய தலைவனே,
  • அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா
    அழகு நிரம்பிய மான் பெற்ற பெண்ணாகிய வள்ளியின் கணவனே,
  • வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா
    பிரமனும் திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேம்பாடு உடையவனே,
  • கடு விடா களா ரூப நட விநோத தாடாளர்
    விஷம் நீங்காத கழுத்தை உடைய உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும்,
  • கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் கடவுள்
    பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக முன்பு அவர்களைத் தேடிச் சென்று சண்டையிட்ட கடவுளும்,
  • ஏறு மீது ஏறி புதல்வ
    ரிஷப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் மகனே,
  • காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே.
    மூல காரணனே, வேதப் பொருளானவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com