திருப்புகழ் 1049 சுருதி ஊடு கேளாது (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
சுருதி  யூடு  கேளாது  சரியை  யாளர்  காணாது 
துரிய  மீது  சாராது  ......  எவராலுந் 
தொடரொ  ணாது  மாமாயை  யிடைபு  காது  ஆனாத 
சுகம  கோத  தீயாகி  ......  யொழியாது 
பருதி  காயில்  வாடாது  வடவை  மூளில்  வேகாது 
பவனம்  வீசில்  வீழாது  ......  சலியாது 
பரவை  சூழி  லாழாது  படைகள்  மோதில்  மாயாது 
பரம  ஞான  வீடேது  ......  புகல்வாயே 
நிருதர்  பூமி  பாழாக  மகர  பூமி  தீமூள 
நிபிட  தாரு  காபூமி  ......  குடியேற 
நிகர  பார  நீகார  சிகர  மீது  வேலேவு 
நிருப  வேத  ஆசாரி  ......  யனுமாலும் 
கருது  மாக  மாசாரி  கனக  கார்மு  காசாரி 
ககன  சாரி  பூசாரி  ......  வெகுசாரி 
கயிலை  நாட  காசாரி  சகல  சாரி  வாழ்வான 
கருணை  மேரு  வேதேவர்  ......  பெருமாளே. 
  • சுருதி ஊடு கேளாது சரியையாளர் காணாது
    வேத மொழிக்குள் கேட்கப்படாததும், சரியை* மார்க்கத்தில் உள்ளவர்களால் காணப்படாததும்,
  • துரிய மீது சாராது எவராலும் தொடர ஒணாது
    யோகியர் தன்மயமாய் நிற்கும் யோக* நிலையிலும் கூட அருகே நெருங்க முடியாததும், யாராலும் தொடர்ந்து அணுக முடியாததும்,
  • மா மாயை இடை புகாது ஆனாத சுக மகா உததீ ஆகி ஒழியாது
    பெரிய மாயைகள் கூட தன்னுள்ளே புக முடியாததும், அழிவில்லாத ஆனந்தப் பெருங் கடலாய் என்றும் அழியாதிருப்பதும்,
  • பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
    சூரியன் காய்ந்து எரித்தாலும் அழியாததும், வடவா முகாக்கினி (ஊழித் தீ) மூண்டாலும் வெந்து போகாததும்,
  • பவனம் வீசில் வீழாது சலியாது பரவை சூழில் ஆழாது
    காற்று வேகமாக வீசினாலும் அதனால் தள்ளுண்டு வீழாததும், சோர்ந்து அசைவற்றுப் போகாததும், கடல் நீர் சூழினும் அமிழ்ந்து போகாததும்,
  • படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே
    எவ்விதமான படைகள் வந்து மோதினாலும் அழிவு படாததும் - இத்தனை தன்மைகளும் உள்ள மேலான ஞான வீடு எது என்று சொல்லியருள்க.
  • நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள
    அசுரர்களின் இருப்பிடங்கள் பாழாகவும், மகரம் முதலிய மீன்கள் வாழும் கடல் தீப்பற்றவும்,
  • நிபிட தாரு கா பூமி குடி ஏற
    நெருக்கமான கற்பகச் சோலைகள் உள்ள பொன்னுலகத்தில் தேவர்கள் குடி புகவும்,
  • நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப
    குவிந்து கிடப்பதும், மிக்க கனமுள்ளதும், பனி மூடியதுமான கிரெளஞ்ச மலையின்மீது வேலைச் செலுத்திய அரசே,
  • வேத ஆசாரியனும் மாலும் கருதும் ஆகம ஆசாரி
    வேத ஆசாரியனான பிரமனும், வேத முதல்வனான திருமாலும் தியானிக்கின்ற சிவாகமங்களைத் தந்த குரு மூர்த்தி,
  • கனக கார் முக ஆசாரி
    பொன் மலையான மேருவாகிய வில்லை ஏந்திய பெருமான்,
  • ககன சாரி பூசாரி வெகு சாரி
    ஞானாகாசத்தில் உலவுகின்றவர், பூதலங்கள்தோறும் வீற்றிருப்பவர், பல விதமான நடையை உடையவர்,
  • கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான
    கயிலையில் பல நடனங்களை ஆடவல்ல தலைவர், எல்லாவற்றிலும் வசிப்பவர் ஆகிய சிவபெருமானது செல்வமான
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com