தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி ...... விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல ...... மெனவோடி
வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன் ...... மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
- குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய
ரத்தம், தோல் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட குடிசையாகிய இவ்வுடலில் கேடு அடைகின்ற இந்த உயிர் நிலை கெட்டு நீங்கும்படி, - ஏமனால் ஏவி விடு காலன் கொடிய பாசம் ஓர் சூல
படையினோடு
யம தர்மனால் அனுப்பப்பட்டு வருகின்ற காலன் என்ற தூதன் கொடுமை வாய்ந்த பாசக் கயிறு, ஒப்பற்ற சூலப் படை இவைகளோடு வந்து, - கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன்
கூச்சமில்லாமல், பொல்லாத துன்ப நோய்களைத் தந்து, வளைத்திருந்து என்னை எதிர்ப்பதன் முன்பு, - பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம்
உறாமல் வேல் ஏவும் இளையோனே
சூரியன், சந்திரன், விண்ணுலகோர், மண்ணுலகத்தினர், திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட திருமால் (ஆகிய இவர்கள்) பயம் நீங்க வேண்டி வேலைச் செலுத்திய இளையவனே, - பழுது உறாத பா வாணர் எழுத ஒணாத தோள் வீர
குற்றம் சிறிதும் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த கவி மணிகளாலும் எழுதுவதற்கு முடியாத (அழகை உடைய) தோள்களை உடைய வீரனே, - பரிவினோடு தாள் பாட அருள் தாராய்
அன்புடன் நான் உன் திருவடியைப் பாடும்படியான திருவருளைத் தந்தருள்க. - மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி
மருத மரம் வேரற்றுச் சிதறி விழும்படி தன் வலிமையைக் காட்டிய மாயவன், புல்லாங் குழலை வாசிப்பவன், - மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி கோபாலர்
மகளிர் கேள்வன்
நீர் நிலையில் நின்ற (கஜேந்திரன் என்ற) யானையானது ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க, அதைக் காப்பாற்ற ஓடிவந்த முரன் என்ற அசுரனின் எதிரியாகிய முராரி, இடைக் குலத்து கோபிகை மகளிரின் கணவன், - மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே
தாயாகிய கைகேயியின் சொல்லை மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற) கேசவனாகிய திருமாலின் மருமகனே, - கருத ஒணாத ஞான ஆதி எருதில் ஏறு காபாலி
எண்ணுதற்கு அரிய ஞான மூர்த்தியும், ரிஷபத்தில் ஏறுபவரும், (பிரம்ம) கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், - கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி
புதல்வ
கடுமை வாய்ந்த பேய்களுடன் ஆடுபவரும், தன்னை மறந்து (சிவ பூசையைக் கைவிட்ட திரிபுரத்தில்) இருந்த அனைவரும் கொடிய நெருப்பில் முழுகும்படி நாடியவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே, - காரண அதீத கருணை மேருவே தேவர் பெருமாளே.
காரணங்களுக்கு அப்பாற்பட்டவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே.