திருப்புகழ் · 1047இரதமான வாய் ஊறல் (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான

Malaithuli Nagarathar

இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான
சமுக மோத ராபூத ...... முதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார ...... வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி ...... மிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை ...... மறவாத
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக மூஷி காரூட ...... மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

பத உரை

  • இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி
    சுவை மிகுந்த வாய் இதழ் ஊறலைப் பருகி காம தாகம் நீங்கி, இனிமை தரும் சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி,
  • இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் சரச மோகம்
    மனம் வேறிடத்திற் போகாமல் (காமத்திலேயே) மனம் உருகி, ஒன்றிய மனத்துடன் நாள் தோறும் இன்பம் தரும் விலைமாதர்களின் தோள்களைச் சேர்ந்து விளையாடுகின்ற லீலை ஆசையானது (பின்வருவனவற்றில் ஒன்றாகுமோ?)
  • மா வேத சரியை யோ(க) க்ரியா ஞான சமுகமோ தரா பூதம் முதலான சகளமோ
    சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட ாரியையோ, கிரியையோ, யோகமோ, ஞான மார்க்கமோ*, அல்லது இந்த மார்க்கங்களின் கூட்டமோ, மண் முதலான ஐந்து பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ,
  • சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ
    மூலாதாரம்** முதலான ஆறு ஆதாரங்களும் அரும்பு விட்ட தோற்றமோ, சார்பு வேண்டியில்லாத சூரிய ஒளியோ, உருவின்மையான ஒரு அழகு தானோ? (இவை ஒன்றுக்கும் ஈடாகாது என்ப).
  • பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான பரமர் தேசிகா
    பரத நாட்டியம் ஆடவல்ல நீல மயில் வாகனனே, வரத மூர்த்தியே, பாம்பைத் தோளணி வகையாக அணிந்தவரும், பரம யோகியும், சிறந்த ஒளி வீசும் அழகு வாய்ந்தவரும், மிக்க ஞானம் நிறைந்த பரம மூர்த்தியுமான சிவபெருமானது குரு மூர்த்தியே,
  • வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத கரதலா
    வேடர் குலத்தில் வளர்ந்த, கற்பு நிறைந்த, தூயவள் வள்ளியின் திருவடித் தாமரையை முடியில் சூடுபவனே, வேலாயுதத்தை மறவாத திருக்கரத்தை உடையவனே,
  • விசாகா சகல கலாதரா போதக முக மூஷிக ஆரூட மத தாரைக் கடவுள் தாதை சூழ் போதில்
    விசாகனே, எல்லா கலைகளிலும் வல்லவனே, யானை முகத்தை உடையவரும், மூஞ்சூறின் மேல் ஏறி வருபவரும், நீரொழுக்குப் போல் மதநீர் ஒழுகுதல் உள்ளவரும் ஆகிய கணபதியின் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்த நேரத்துக்குள்
  • உலகம் ஏழு(ம்) சூழ்போது கருணை மேருவே தேவர் பெருமாளே.
    ஏழுலகையும் சுற்றி வந்த, மலர் போன்ற திருவடியை உடைய, கருணைப் பெரு மலையே, தேவர்களின் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு: 1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'. 2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'. 3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'. 4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. . . . சிவஞான சித்தியார் சூத்திரம்.
  • ** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
  • * The four methods of worship are: 1. sariyai: Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'. 2. kiriyai: Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'. 3. yOgam: Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'. 4. gnAnam: Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout