திருப்புகழ் · 1046அயிலின் வாளி (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான

Thinam Thinam Thirupugazh

அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச
ரமுத ளாவு மாவேச ...... மதுபோல
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
னளவு மோடி நீடோதி ...... நிழலாறித்
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
துறவ ரான பேர்யாரு ...... மடலேறத்
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாம ளாவாமை ...... அபிராமி
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
பரம யோகி னீமோகி ...... மகமாயி
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
கனத னாச லாபார ...... அமுதூறல்
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

பத உரை

  • அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய்
    அம்பின் கூர்மை, வேலின் நுனி இவைகளின் அளவு போலக் கூர்மை கொண்டதாய்,
  • ஈசர் அமுது அளாவும் ஆவேச மது போல
    சிவபெருமான் அமுதாக உண்ட விஷத்தின் தன்மையைக் கொண்டுள்ளதாய், பொங்கி எழச்செய்யும் கள்ளைப் போன்றதாய்,
  • அறவு நீளிதாய் மீள அகலிதாய வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி
    மிகவும் நீண்டதாய், பின்னும் அகன்றதாய், நெடிய காது இருக்கும் இடம் வரை ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறி,
  • துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற
    தூக்கம் இல்லாத தேவர்களும், காம இச்சை கொள்ளாத வேடம் பூண்ட துறவிகள் யாவரும் மடல்* ஏறும் வகைக்கு,
  • துணியுமாறு உலா(வு) நீல நயன மாதராரோடு
    துணிச்சலுடன் உலவுகின்ற, நீலோற்பலம் போன்ற கண்களை உடைய விலைமாதர்களோடு
  • துவளுவேனை ஈடேறு நெறி பாராய்
    இணக்கம் வைத்து வாடுகின்ற என்னை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக.
  • பயிலும் மேக நீகாரம் சயில ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி
    நெருங்கி எழும் மேகங்களின் கூட்டம் படிகின்ற இமயமலை அரசனான இமவானுடைய செல்வப் புதல்வியான பார்வதி தேவி, ஒரு வகைப் பச்சை நிறம் உடையவள், ஈசனின் இடது பக்கத்தில் உள்ளவள், பேரழகி,
  • பரி புர(ம்) ஆர(ம்) பாதார சரணி சாமள ஆகார பரம யோகினீ மோகி மகமாயி
    சிலம்பும், மலர் மாலைகளும் உள்ள பாதத் தாமரையாகிய திருவடிகள் உடையவள், மரகதப் பச்சை வண்ணத்தாள், பரதேவதை, அனைவருக்கும் அன்பு ஊட்டுபவள், பெரிய அம்பிகை,
  • கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி
    கயிலாசநாதரின் ஒரு பாகத்தில் உள்ளவள், எல்லாத் தேவர்களையும் ஆள்பவள், உலகம்மை ஆனவள்,
  • கன(ம்) தன அசலா பாரம் அமுது ஊறல் கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர
    (அத்தகைய பார்வதி தேவியின்) பருத்த மார்பகங்களில் இருந்து ஊறின பாலமுதின் நறுமணம் வீசும் (வாயால்) வேதப் பாக்களாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராகத் தோன்றிப்) பாடிய கவிவாணனே, வேல் வீரனே,
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    கருணை உருவான மேருமலையே, தேவர்கள் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
  • * Sending out passion-filled doodles in palm leaves was known as "madal ERuthal": here the passion-stricken hero makes several doodles and mounts a horse made of palm leaves to go around the town announcing to the world his love for the heroine.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout