திருப்புகழ் · 1045அமல வாயு (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான

Thiruppugazh Anbargal

அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான மேமூல ...... அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபான ...... மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக ...... வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத ...... மருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
விபுத மேக மேபோல ...... வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவி தாமு காகாய ...... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல மாயூர ...... இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

பத உரை

  • அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல
    பிராண வாயு மேற்கொண்டு செல்லாதபடி மூலாதார* கமலத்தின் மீது அங்ஙனம் செய்ததின் மூலம்
  • அமுத பானமே மூல அனல் மூள
    அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ,
  • அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது
    மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து சிறிதும் மாறாமல்,
  • அரிச(ம்) அதான சோபானம் அதனாலே
    மகிழ்ச்சி தருவதான படிப்படியாக மேலேறும் யோக முறையாலே,
  • எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம்
    நமனையும் தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை
  • எளிது சால மேலாக உரையாடும்
    மிகவும் எளிதான வகையில் மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற
  • எனது யானும் வேறாகி
    எனது என்ற மமகாரமும், நான் என்ற அகங்காரமும் நீங்கி,
  • எவரும் யாதும் யான் ஆகும்
    பிற பொருள்கள் யாவும் நானே ஆகக்கூடிய
  • இதய பாவன அதீதம் அருள்வாயே
    மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.
  • விமலை தோடி மீதோடு யமுனை போல
    பரிசுத்தமான தேவியின் தொடி என்னும் கை வளையினின்றும் (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும்**,
  • ஓர் ஏழு விபுத மேகமே போல
    ஒப்பற்ற, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த, மேகத்தைப் போலவும்,
  • உலகு ஏழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீளு மாறு போல
    ஏழு உலகங்களின் பரப்பையும் காணவல்ல பெரிய திருமால் (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி விசுவ ரூபம் எடுத்தது போலவும்,
  • வெகு விதா முக ஆகாய பதம் ஓடி
    பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று,
  • கமல யோனி வீடான ககன கோள மீது ஓடும்
    (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் இருப்பிடமான விண்ணில் உள்ள பிரம்ம மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற
  • கலப நீல மாயூர இளையோனே
    நீலத் தோகை விளங்கும் மயில் வாகனனே, என்றும் இளையவனே,
  • கருணை மேகமே தூய கருணை வாரியே
    கருணை மேகமே, பரிசுத்தமான கருணைக் கடலே,
  • ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே.
    முடிவில்லாத கருணையை உடைய மேரு மலையே, தேவர்கள் போற்றும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
  • ** முன்பு உமாதேவியின் திருக்கரங்களில் சிவபிரான் முகத்தைப் புதைக்க, தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை சிந்தி அவையே கங்கை, யமுனை முதலிய நதிகளாக ஆயின - சிவபுராணம்.
  • ** Once, Lord SivA pressed His face in both hands of UmAdEvi. The resultant sweat ran through the ten fingers of DEvi gushing along Her bangles, forming ten perennial rivers of the Himalayas, like Ganga, Yamuna, Brahmaputhra etc. - SivapurANam.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout