திருப்புகழ் · 1044அடை படாது (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு
அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி மீதி லோயாது ...... தடுமாறும்
உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உதறி வாச காதீத ...... அடியூடே
உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்
உபய பாத ராசீக ...... மருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரி யோரேழு ...... மமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக்
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி
புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

பத உரை

  • அடை படாது நாள் தோறும் இடை விடாது போ(கு)ம் வாயு அடைய மீளில்
    உள்ளே அடைபட்டுப் போகாமல் ஒவ்வொரு நாளும் இடை விடாமல் போகின்ற மூச்சுக் காற்று முழுமையும் வீணாகாது உடலில் மீண்டும் வந்து (கும்பக முறையில்*) அடங்குமாயின்,
  • வீடு ஆகும் என நாடி அருள் பெறா அனாசார கரும யோகி ஆகாமல்
    முக்தி வீடு கிடைக்கும் என்ற உண்மையை ஆராய்ந்து விரும்பி உனது திருவருளைப் பெறாத, ஒழுக்கம் இல்லாத கரும யோகியாய் வாழ்வைக் கழிக்காமல்,
  • அவனி மீதில் ஓயாது தடுமாறும்
    இப் பூமியில் எப்போதும் நான் கெட்டு அலையாமல்,
  • உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி
    எனது உடல் வேறு, நான் வேறு, என் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) கரணங்கள் வேறு - இவைகள் யாவும் வேறு வேறு என்று உதறித் தள்ளி,
  • வாசக அதீத அடியூடே உருகி
    உரைகளுக்கு எட்டாத உன் திருவடிச் சரணங்களில் வீழ்ந்து, உள்ளம் உருகி,
  • ஆரிய ஆசார பரம யோகி ஆம் ஆறும்
    மேலான ஆசார ஒழுக்கம் வாய்ந்த சிறந்த சிவ யோகி ஆகும் பொருட்டு,
  • உன் உபய பாத ராசீகம் அருள்வாயே
    உன் இரண்டு திருவடிகளாகிய ராஜபோகத்தை அருள்வாயாக.
  • வட பராரை மா மேரு கிரி எடா நடா
    வடக்கே உள்ளதும், பருத்த அடிப்பாகம் உடையதுமாகிய மேரு மலையை எடுத்து (மத்தாக) நட்டு,
  • மோது மகர வாரி ஏழும் அமுதாக
    அலைகள் மோதும் கடல்கள் ஓர் ஏழினின்றும் அமுது வரும்படி,
  • மகுட வாள் அரா நோவ மதியம் நோவ
    ஒளி பொருந்திய மணி முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியின் உடல் (கயிறாக இழுத்ததால்) வலிக்கும்படியும், (தூணாகச் சாத்தப்பட்ட) சந்திரனின் உடல் நோவவும்,
  • வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ
    தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி விரும்பும் தனது ஆயிரம் தோள்களும்** நோவும்படியும்,
  • கடையும் ஆதி கோபாலன் மருக
    கடலைக் கடைந்த ஆதி மூர்த்தியாகிய கோபாலனின் மருகனே,
  • சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே
    சூலாயுதத்தையும், பிரம்ம கபாலத்தையும் ஏந்துகிற சிவபெருமானது மகனே, வேல் பிடித்த வேடர்களின் கொடிபோன்ற வள்ளியின் தலைவனே.
  • கனக லோக பூபால சகல லோக ஆதார
    பொன்னுலகமாகிய தேவர்கள் உலகைப் பரிபாலித்த அரசே, எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக உள்ளவனே,
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    உனது கருணை மேரு மலையைப் போன்று பெரியது, தேவர்களுக்குப் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன. 'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். 'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். 'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. 'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன. சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
  • ** தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடலைக் கடைய இயலாதபோது, திருமால் தனது ஆயிரம் தோள்கள் கொண்டு கடலைக் கடைந்தார்.
  • * In this song, several Siva-yOgA principles are explained: The inhaled air is known as 'pUragam' and the exhaled air is 'rechagam'. The retained air is 'kumbagam'. The oxygen that enters the body climbs up step by step through several centres, known as 'chakrAs' and ultimately reaches 'sahasrAram' or 'bindhuchakram' on the top of the skull. At that point of union, nectar flows from that chakrA and seeps through and soaks the six centres of the body and returns to the basic chakrA, 'mUlAthAram'. Three zones (namely, the sun zone, the moon zone and the fire zone) and ten nerves ('nAdis') govern the six centres; the principal nerves are 'susumna', 'idaikala' and 'pingala'. idakala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the left nostril; pingala: one of the ten 'nAdis' (nerves), when inhalation takes place through the right nostril; susumna: one of the ten 'nAdis' (nerves), situated between the above two 'nadis', and running through the spinal chord covering all the six centres of 'kundalini'. ('idakala' and 'pingala' are entwined around 'susumna'). If breathing is controlled through a yOgA called 'praNAyAmA', the mind becomes tranquil.
  • ** When the celestials and the demons gave up churning the milky ocean, Lord VishNu churned it Himself using His thousand shoulders.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout