திருப்புகழ் · 1029கூறும் மார வேள் (பொதுப்பாடல்கள்)kURummAravEL
தான தான தானான தானத் ...... தனதான
Kadhir Velan Karunai
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பத உரைword meanings
- கூறும் மார வேள் ஆரவாரக் கடலாலே
புகழ் பெற்ற மார வேளாகிய மன்மதனாலும், பேரொலி செய்யும் கடலாலும், - கோப மீது மாறாத கானக் குயிலாலே
என் மீது கோபம் நீங்காத, இசை பாடும், குயிலாலும், - மாறு போலும் மாதாவின் வார்மைப் பகையாலே
என் மீது விரோதம் பூண்டவள் போலுள்ள தாயின் நியாயமான பகையாலும், - மாது போத மால் ஆகி வாடத் தகுமோதான்
பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு வாடுதல் நியாயமாகுமோ? - ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா
அழகிய தோகை மயிலின் மேல் ஏறி வீராவேசம் செய்யும் வீரனே, - ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே
ஏழு உலகங்களும் வாழ்வதற்கு உதவும் சேவற் கொடியோனே, - சீறு சூரர் நீறு ஆக மோதிப் பொரும் வேலா
கோபித்து எழுந்த சூரர்கள் பொடியாகும்படி தாக்கி சண்டை செய்த வேலனே, - தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- இந்தப் பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. மாரன், கடல், குயில் கூவுதல், தாயின் வசை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரைக் கூட்டும் பொருள்கள்.
- This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan. The waves of the sea, the God of Love Manmathan, cuckoo's song and the mother's scorn are a few of the things that aggravate the agony of separation.
