திருப்புகழ் · 1030பேரவா அறா (பொதுப்பாடல்கள்)

pEravAaRA

தான தான தானான தானத் ...... தனதான
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பேரவா அறாவாய்மை பேசற்கறியாமே
    பேராசை நீங்காத நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல்,
  • பேதை மாதராரோடு கூடிப் பிணிமேவா
    அறிவீனர்களாகிய பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து,
  • ஆர வார மாறாத நூல்கற்று அடிநாயேன்
    ஆடம்பரம் நீங்காத சமயக் கூச்சலுக்கு இடம்தரும் நூல்களைப் படித்து அடிமை நாயான எனது
  • ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே
    உயிர் வீண் படாமல் நீ சிறிது அருள் புரிவாயாக.
  • சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா
    சூரர்களுக்குச் சூரனான சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே,
  • தோகையா குமாரா கிராதக் கொடிகேள்வா
    மயில் வாகனனே, குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே,
  • தீர தீர தீராதி தீரப் பெரியோனே
    மகா தீரம் உடையோய், தைரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே,
  • தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.
    தேவதேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits