திருப்புகழ் · 1028காதி மோதி (பொதுப்பாடல்கள்)

தான தான தானான தானத் ...... தனதான

Thiruppugazh Anbargal

காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.

பத உரை

  • காதி மோதி வாதாடு
    எதிர்த்துப் பேசியும், தாக்கியும், வாதம் செய்யவல்ல
  • நூல்கற்றிடுவோரும்
    நூல்களைக் கற்றவர்களும்,
  • காசு தேடி யீயாமல்
    பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடாது
  • வாழப் பெறுவோரும்
    வாழ்க்கை நடத்துபவர்களும்,
  • மாதுபாகர் வாழ்வே யெனா
    பார்வதிபாகன் சிவபிரானது செல்வமே என்று
  • நெக்குருகாரும்
    உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும்,
  • மாறிலாத மாகாலனூர்
    தர்மநெறி மாறாத பெரும் யமதர்மபுரிக்கு
  • புக்கலைவாரே
    புகுந்து பிறந்து புகுந்து அலைச்சல் உறுவார்கள்.
  • நாத ரூப
    இசை உருவத்தோனே,
  • மாநாதர் ஆகத்து உறைவோனே
    மகாதேவர் சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்போனே,
  • நாகலோக மீரேழு பாருக்கு
    சுவர்க்க லோகம் ஆகிய பதினான்கு உலகங்களுக்கும்*
  • உரியோனே
    உரிமைக்காரனாக விளங்குவோனே,
  • தீதி லாத வேல்வீர
    தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே,
  • சேவற்கொடியோனே
    சேவலைக் கொடியாக உயர்த்தியவனே,
  • தேவ தேவ
    தேவ தேவனே,
  • தேவாதி தேவப் பெருமாளே.
    தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * 14 உலகங்கள் பின்வருமாறு: கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம். மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.
  • * The 14 worlds are as follows: 7 Upper Worlds: bUlOgam, bhuvarlOgam, suvarlOgam, janalOgam, thabOlOgam, mahAlOgam and sathyalOgam. 7 Lower Worlds: athalam, vithalam, suthalam, tharAthalam, mahAthalam, rasAthalam and pAthAlam.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout