திருப்புகழ் · 1027தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்)

thOdhagammiguththa

தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான

Yaazh Music

தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட ...... மவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபிணி சற்று ...... மணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து ...... அருள்வாயே
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி ...... மணவாளா
காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை ...... மயில்வீரா
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு ...... முருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • தோதகம் மிகுத்த பூதம் மருள்
    வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும்
  • பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய்
    விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து,
  • சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை
    எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள்,
  • தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே
    தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல்,
  • வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே
    வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக.
  • காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா
    காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே,
  • காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா
    உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே,
  • வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே
    வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே,
  • மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே.
    முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits