தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தனதான
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
கலசமு மதனுய ரம்பொன் மாமுடி
யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி
அடைபடு குடயுக ளங்க ளாமென
ம்ருகமத களபம ணிந்த சீதள
அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி
இரவொடு பகலொழி வின்றி மால்தரு
மலைகட லளறுப டிந்து வாயமு
தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி
இருவரு மருவிய ணைந்து பாழ்படு
மருவினை யறவும றந்து னீள்தரு
மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்
துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள
தொலைவறு மலகையி னங்க ளானவை
நடமிட நிணமலை துன்ற வேயதில்
துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால்
பருகுத லரியது கந்த தீதிது
உளதென குறளிகள் தின்று மேதகு
பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா
பகிரதி சிறுவவி லங்க லூடுறு
குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு
பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே.
- அரிசன(ம்) பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர்
அம் பொன் மா முடியதும் என
மஞ்சள் பூசியுள்ள, அலங்காரமான அமிர்த கலசம் என்றும், மன்மதனுடைய சிறந்த பொன் கிரீடம் என்றும் சொல்லும்படியாய், - இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி அடை படு குட
யுகளங்களாம் என ம்ருக மத களபம் அணிந்த சீதள அபி நவ
கன தன மங்கைமாருடன் விளையாடி
இளைஞர்களுடைய மனமும் உயிரும் ஒரு கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் போன்ற இரண்டு என்று சொல்லும்படியாய், கஸ்தூரிக் கலவையை அணிந்துள்ள, குளிர்ச்சி உள்ள, புதுமை வாய்ந்த கனத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடன் லீலைகள் புரிந்து, - இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரும் அலை கடல் அளறு
படிந்து வாய் அமுது இனிது என அருள அருந்தி ஆர்வமொடு
இதமாகி
இரவும் பகலும் ஓய்வே இல்லாமல் மோகத்தைத் தரும் காமக் கடலாகிய சேற்றில் படிந்து, வாயிதழ் ஊறல் இனிக்கும் என்று தர பருகி, அன்பும் இன்பமும் பூண்டு, - இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும்
மறந்து உன் நீள் தரும் இணை மலர் அடிகள் நினைந்து
வாழ்வதும் ஒரு நாளே
இருவரும் பொருந்தி அணைந்து பாழாவதற்கு இடமாகும், வினைக்கு இடமான செயலை அடியோடு மறந்து, உனது ஒளி பொருந்திய இரண்டு திருவடிகளையும் நினைந்து வாழ்வதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? - சுரர் குலபதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள்
அண்டர் ஆனவர் துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி
மாள
தேவர்கள் குலத்துக்குத் தலைவனான இந்திரன், பிரமன், திருமால், மற்றும் (மான்) தோல் உரியை ஆடையாக அணிந்த முனிவர்களும், தேவர்களும் தோத்திரம் செய்ய, எதிர்த்துப் போர் புரிய வந்த அசுரர்கள் அடியோடு இறந்து பட, - தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண
மலை துன்றவே
சோர்வு இல்லாத பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படியாக மாமிச மலை நிரம்ப அவைகளுக்குக் கிடைக்க, - அதில் துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது
வீணால் பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என
குறளிகள் தின்று மேதகு பசி கெட ஒரு தனி வென்ற சேவக
மயில் வீரா
அங்ஙனம் கிடைத்த மாமிசத்தில் துவர்ப்புள்ள பாகம் இது, புளிப்பான பாகம் இது, கட்டியாய் உறைந்து போன பாகம் இது, இது கெட்டுப் போனது, உண்பதற்கு உபயோகம் அற்றது, உண்ணத் தகுந்தது இங்கே உள்ளது என்று கூறி பூத பிசாசுகள் உண்டு மிக்க பசி தீரும்படியாக, ஒப்பற்ற தனித்த நிலையில் வெற்றி கொண்ட பராக்ரம மயில் வீரனே, - பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து
மேல் எழு பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே.
கங்கையின் புதல்வனே, மலையில் வாசம் செய்யும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, அகன்று மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிரவுஞ்ச மலையை ஊடுருவும்படி செலுத்திய வேலாயுதத்தை ஏந்த வல்ல பெருமாளே.