தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
முருகு லாவிய குழலினு நிழலினும்
அருவ மாகிய இடையினு நடையினு
முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர்
முனிவி லாநகை வலையினு நிலையினும்
இறுக வாரிடு மலையெனு முலையினு
முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி
நரகி லேவிழு மவலனை யசடனை
வழிப டாதவொர் திருடனை மருடனை
நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ
லதனில் மூழ்கிய மறவனை யிறவனை
நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே
வரிய ராவினின் முடிமிசை நடமிடு
பரத மாயவ னெழுபுவி யளவிடு
வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக
வகிரு மாலரி திகிரிய னலையெறி
தமர வாரிதி முறையிட நிசிசரன்
மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங்
கரிய மேனியன் மருதொடு பொருதவன்
இனிய பாவல னுரையினி லொழுகிய
கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன்
கருணை நாரண னரபதி சுரபதி
மருக கானக மதனிடை யுறைதரு
கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.
- முருகு உலாவிய குழலினும் நிழலினும்
நறு மணம் வீசும் கூந்தலிலும், அக் கூந்தலின் ஒளியிலும், - அருவமாகிய இடையினு(ம்) நடையினு(ம்)
கண்ணுக்குப் புலப்படாத அளவுக்குச் சிறுத்திருந்த இடையிலும், நடை அழகிலும், - முளரி போலு(ம்) நல் விழியினு(ம்) மொழியினு(ம்)
தாமரை போன்ற அழகிய கண்ணிலும், பேச்சிலும், - மட மாதர் முனிவிலா நகை வலையினு(ம்) நிலையினு(ம்)
இளம் பெண்களின் கோபக்குறி இல்லாத புன்னகையாகிய வலையிலும், அதன் (வசீகரத்) ை தன்மையிலும், - இறுக வார் இடு மலை எனும் முலையினு(ம்)
அழுத்தமாக கச்சு அணிந்த மலை போன்ற மார்பிலும், - முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி
முடிவே இல்லாததும், ஒப்பற்ற கொடிய விஷம் கொல்லுவது போன்ற தன்மையதான மோகத்தைக் கொண்டவனாகி, - நரகிலே விழும் அவலனை அசடனை
நரகத்தில் விழும் வீணனும் முட்டாளுமான என்னை, - வழிபடாத ஒர் திருடனை மருடனை
ஒரு நல்வழிக்கும் வராத ஓர் திருடனும், மயக்கத்தில் இருப்பவனுமான என்னை, - நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை
நன்மை நினைவே இல்லாத உள்ளக் கபடனும், செருக்கு உள்ளவனும், தீ வினைக்கு ஈடானவனுமான என்னை, - நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய
மறவனை இறவனை
நடு நிலைமையே இல்லாது வஞ்சகமே பூண்டு, தடை வார்த்தைகளைப் பேசுவதிலேயே முழுகிய கொடியோனும், இறந்து ஒழிதற்கே பிறந்தவனுமான என்னை, - நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே
தாமரை போன்ற உனது திருவடிகளை அடையச் செய்வதற்கு ஓர் உபதேசத்தை அருள்வாயாக. - வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன்
கோடுகளைக் கொண்ட (காளிங்கன் என்னும்) பாம்பின் முடி மீது நடனம் செய்யும் பரத நாட்டியத்தில் வல்ல மாயவன், - எழு புவி அளவிடு வரதன் மாதவன்
ஏழு உலகங்களையும் பாதத்தால் அளந்தவன், வரமளிப்பவன், மாதவன், - இரணியன் உடல் இரு பிளவாக வகிரும் மால் அரி
திகிரியன்
இரணியனுடைய உடலை இரண்டு பிளவாகும்படி நகத்தால் கீறிய திருமால், அரி, சக்கரம் ஏந்தியவன், - அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் மகுடம்
ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் கரிய மேனியன்
அலை வீசுகின்றதும் ஒலிப்பதுமான கடல் முறையிடவும், அரக்கனாகிய இராவணனுடைய மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அறுபட்டு விழும்படி, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கரிய உடல் கொண்டவன், - மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய
கடவுள்
மருத மரங்களைச் சாடித் தள்ளியவன், இனிமை வாய்ந்த புலவனாகிய (திருமழிசை ஆழ்வாரின்) சொல்லுக்கு இணங்கி அதன் படி நடந்த கடவுள்*, - வேய் இசை கொ(ண்)டு நிரை பரவிடும் அபிராமன்
புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக் கூட்டத்தைப் பாதுகாத்த பேரழகன், - கருணை நாரணன் நர பதி சுர பதி மருக
கருணை நிறைந்த நாராயண மூர்த்தி, அருச்சுனனுக்குத் தலைவன், தேவர்களின் தலைவன் ஆகிய திருமாலுக்கு மருகனே, - கானகம் அதன் இடை உறை தரு கரிய வேடுவர் சிறுமியொடு
உருகிய பெருமாளே.
காட்டில் குடியிருந்த கருநிறங் கொண்ட வேடர்களின் சிறுமியாகிய வள்ளிக்காக மனம் உருகிய பெருமாளே.