தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
இலகு வேலெனு மிருவினை விழிகளும்
எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும்
இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண்
டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ
னினிய மாவினை யிருளெனும் வலைகொடு
இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம்
கலவி மால்கொடு கலைகளு மறிவொடு
கருதொ ணாதென முனிவுற மருள்கொடு
கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே
கருணை வானவர் தொழுதெழு மயிலுறை
குமர கானவர் சிறுமியொ டுருகிய
கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய்
பலகை யோடொரு பதுசிர மறஎறி
பகழி யானர வணைமிசை துயில்தரு
பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே
பழுதி லாமன முடையவர் மலர்கொடு
பரவ மால்விடை மிசையுறை பவரொடு
பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே
அலகை காளிகள் நடமிட அலைகட
லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை
அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா
அரிய பாவல ருரைசெய அருள்புரி
முருக ஆறிரு புயஇய லிசையுடன்
அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே.
- இலகு வேல் எனும் இரு வினை விழிகளும் எழுத ஒணாது
எனும் இரு தன கிரிகளும்
விளங்குகின்ற வேல் போன்றதும், பெரிய வினைகள் விளைவதற்குக் காரணமானதுமான கண்களும், படத்தில் எழுதிக்காட்ட முடியாது என்னும்படி உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களும், - இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே
கொண்டு எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய
மா வினை இருள் எனும் வலை கொடு இடை விடா தெறு
நடுவனும் என வளை மடவார் தம்
ஓசையுடனே பேசப்படுகின்ற பழிப்புச் சொற்கள் வெளி வரும் பேச்சுக்களும், இவைகளின் சந்திப்பால் இணையற்ற மிக்க ஆற்றல் உடைய இளைஞர்கள் என்கின்ற இன்பம் கொண்ட விலங்குகளை அவர்களுடைய அஞ்ஞானம் என்ற வலையில் மாட்டி ஓய்வில்லாமல் கொல்லுகின்ற யமன் என்று சொல்லும்படி வளையல்கள் அணிந்த விலைமாதர்களின் - கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருத ஒணாது
என முனிவுற மருள் கொடு கரையிலா விதி எனும் ஒரு கடல்
இடை கவிழாதே
புணர்ச்சியில் ஆசை கொண்டு, கலை நூல்களை அறிவு கொண்டு நினைக்கவும் முடியாது என்னும்படியாக வெறுத்து விலக்க, மயக்க உணர்ச்சியால் கரை என்பதே இல்லாத விதி என்கின்ற ஒரு கடல் நடுவில் நான் கவிழ்ந்து போகாமல், - கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர்
சிறுமியொடு உருகிய கமல தாள் இணை கனவிலும் நினைவு
உற அருள் தாராய்
கருணை மிகுந்த தேவர்கள் வணங்கி எழும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரனே, வேட்டுவச் சிறுமியாகிய வள்ளியின் பொருட்டு மனம் உருகி நடந்த பாத கமலத்தை உடையவனே, உனது திருவடி இணைகளை கனவிலும் நான் நினைக்கும்படி அருள் புரிவாயாக. - பல கையோடு ஒரு ப(த்)து சிரம் அற எறி பகழியான் அரவு
அணை மிசை துயில் தரு பரமன் மால் படி அளவிடும் அரி
திரு மருகோனே
(ராவணனின்) பல கைகளுடன் ஒப்பற்ற பத்துத் தலைகளும் அற்று விழும்படி செலுத்திய அம்பை உடையவன், (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் துயிலும் மேலோனாகிய மாயோன், பூமியை அளந்த திருமாலின் மருகனே, - பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை
மிசை உறைபவரொடு பரம ஞானமும் இது என உரை செய்த
பெரியோனே
குற்றமில்லாத மனத்தை உடைய அடியார்கள் மலர்களைக் கொண்டு போற்ற, பெருமை வாய்ந்த ரிஷப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு மேலான ஞானப் பொருள் இதுதான் என்று உபதேசம் செய்த பெரியோனே, - அலகை காளிகள் நடம் இட அலை கடல் அதனில் நீள்
குடல் நிண மலை பிண மலை அசுரர் மார்பகம் அளறது பட
விடும் அயில் வேலா
பேய்களும் காளிகளும் மகிழ்ந்து கூத்தாட, அலை வீசும் கடலில் நீண்ட குடல்களும், மாமிச மலைகளும், பிண மலைகளும், அசுரர்களின் மார்பிடங்களும் ரத்தச் சேறுபட்டு அழியும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, - அரிய பாவலர் உரை செய அருள் புரி முருக ஆறிரு புய
இயல் இசையுடன் அழகும் ஆண்மையும் இலகிய சரவண
பெருமாளே.
அருமை வாய்ந்த புலவரான நக்கீரர் உன்னைப் பாடி (திருமுருகாற்றுப்படையால்) புகழ அருள் புரிந்த முருகனே, பன்னிரண்டு திருப்புயங்களை இயற்றமிழும், இசைத் தமிழும், அழகும், ஆண்மையும் அலங்கரிக்க விளங்குகின்றவனே, சரவண மடுவில் தோன்றிய பெருமாளே.