திருப்புகழ் 1004 தசையும் உதிரமும் (பொதுப்பாடல்கள்)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
தசையு  முதிரமு  நிணமொடு  செருமிய 
கரும  கிருமிக  ளொழுகிய  பழகிய 
சடல  வுடல்கடை  சுடலையி  லிடுசிறு  ......  குடில்பேணுஞ் 
சகல  கருமிகள்  சருவிய  சமயிகள் 
சரியை  கிரியைகள்  தவமெனு  மவர்சிலர் 
சவலை  யறிவினர்  நெறியினை  விடஇனி  ......  யடியேனுக் 
கிசைய  இதுபொரு  ளெனஅறி  வுறவொரு 
வசன  முறஇரு  வினையற  மலமற 
இரவு  பகலற  எனதற  நினதற  ......  அநுபூதி 
இனிமை  தருமொரு  தனிமையை  மறைகளின் 
இறுதி  யறுதியி  டவரிய  பெறுதியை 
இருமை  யொருமையில்  பெருமையை  வெளிபட  ......  மொழிவாயே 
அசல  குலபதி  தருமொரு  திருமகள் 
அமலை  விமலைக  ளெழுவரும்  வழிபட 
அருளி  அருணையி  லுறைதரு  மிறையவ  ......  ளபிராமி 
அநகை  அநுபவை  அநுதயை  அபிநவை 
அதல  முதலெழு  தலமிவை  முறைமுறை 
அடைய  அருளிய  பழையவ  ளருளிய  ......  சிறியோனே 
வசுவ  பசுபதி  மகிழ்தர  வொருமொழி 
மவுன  மருளிய  மகிமையு  மிமையவர் 
மரபில்  வனிதையும்  வனசரர்  புதல்வியும்  ......  வடிவேலும் 
மயிலு  மியலறி  புலமையு  முபநிட 
மதுர  கவிதையும்  விதரண  கருணையும் 
வடிவு  மிளமையும்  வளமையு  மழகிய  ......  பெருமாளே. 
  • தசையும் உதிரமும் நிணமொடு செருமிய
    சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள,
  • கரும கிருமிகள் ஒழுகிய பழகிய சடல உடல்
    செயல்கள் நிறைந்துள்ள புழுக்கள் இருந்து பழகும் அறிவில்லாத ஜடப்பொருளாகிய உடல்,
  • கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும்
    இறுதியில், சுடு காட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு, (இதைப்) போற்றி வளர்க்கும்
  • சகல கருமிகள் சருவிய சமயிகள்
    (சாத்திர முறைப்படி) அனைத்துக் கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற சமய வாதிகள்,
  • சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்
    சரியை, கிரியை, தவம் என்று சொல்லும் சிலர்,
  • சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு
    மனக் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள் ஆகியோர் கொண்டுள்ள மார்க்கத்தை* நான் விட்டொழிக்க, இனிமேல் அடியவனாகிய எனக்கு
  • இசைய இது பொருள் என அறிவு உற
    இதுதான் ஞானப் பொருள் என்று என் மனதில் படும்படி,
  • ஒரு வசனம் உற இரு வினை அற மலம் அற
    ஒப்பற்ற உபதேசத்தை நான் பெறவும், நல்வினை, தீவினை எனப்படும் இருமைகள் நீங்கவும், எனது (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் நீங்கவும்,
  • இரவு பகல் அற எனது அற நினது அற
    (ஆன்மாவின்) கேவல சகல நிலைகள் நீங்கவும், என்னுடைய மமகாரம் ஒழியவும், உன்னுடைய துவித நிலை (அதாவது நீ வேறு, நான் வேறு என்ற தன்மை) நீங்கவும்,
  • அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை
    அனுபவ உண்மையை, இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை,
  • மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை
    வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவு செய்து கூறுதற்கு அரிதான பேற்றினை,
  • இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே
    சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களின் ஒன்றான தன்மையின் பெருமை விளங்க அடியேனுக்கு வெளிப்படுத்தும்படி உபதேசித்து அருள்வாயாக.
  • அசல குல பதி தரும் ஒரு திரு மகள்
    மலைகளுள் சிறந்த இமய மலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி,
  • அமலை விமலைகள் எழுவரும் வழிபட
    களங்கம் அற்றவள், தூய்மையான சப்த மாதர்கள்** ஏழு பேரும் (தன்னை) வணங்க
  • அருளி அருணையில் உறை தரும் இறையவள் அபிராமி
    அருள் செய்து திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி, அழகி,
  • அநகை அநுபவை அநுதயை அபிநவை
    பாவம் அற்றவள், ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள்,
  • அதல முதல் எழு தலம் இவை முறை முறை
    அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி
  • அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே
    முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே,
  • வசுவ பசுபதி மகிழ் தர ஒரு மொழி
    அக்கினி சொரூபியாகிய சிவ பெருமான் மகிழும்படி ஒப்பற்ற உபதேச மொழியான
  • மவுனம் அருளிய மகிமையும்
    மவுன உபதேசத்தை அவருக்கு அருளிய விசேஷப் பெருமையும்,
  • இமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடிவேலும்
    தேவர்கள் குலத்தில் வந்த மங்கை தேவயானையும், வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியும், கூர்மையான வேலும்,
  • மயிலும் இயல் அறி புலமையும் உப நிட மதுர கவிதையும் விதரண கருணையும்
    மயிலும், இயற்றமிழில் வல்ல புலமையும், உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும், கொடைத் திறம் நிறைந்த உனது கருணையும்,
  • வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே.
    உனது வடிவமும், இளமையும், செழுமையும் சிறந்து விளங்கும் அழகுமிக்க பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com