தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கமல குமிளித முலைமிசை துகிலிடு
விகட கெருவிக ளசடிகள் கபடிகள்
கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள்
கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்
அநெக விதமொடு தனியென நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி
அமுத மொழிகொடு தவநிலை யருளிய
பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத
அசட னறிவிலி யிழிகுல னிவனென
இனமு மனிதரு ளனைவரு முரைசெய
அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே
திமித திமிதிமி டமடம டமவென
சிகர கரதல டமருக மடிபட
தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள்
சிவமி லுருகியு மரகர வெனவதி
பரத பரிபுர மலரடி தொழஅநு
தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே
குமர சரவண பவதிற லுதவிய
தரும நிகரொடு புலமையு மழகிய
குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை
மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை
குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.
- கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள்
அசடிகள் கபடிகள்
தாமரையின் மொக்குப் போல புடைத்தெழுந்த மார்பின் மீது மேலாடையை எடுப்பாக அணியும் மிகுந்த கர்வம் பிடித்தவர்கள், மூடர்கள், வஞ்சகர்கள், - கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள்
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள்
கலகத்தை விளைவிக்கும் கண்ணாகிய வலையை வீசித் தழுவுபவர்கள், வாலிபர்களை நெருப்பில் இட்ட மெழுகைப் போல உருகச்செய்து சிரிப்பவர்கள், - அநெக விதமொடு தனி என நடவிகள் கமரில் விழுகிடு
கெடுவிகள் திருடிகள் தமை நாடி
பலவிதமான வழிகளில், இணை இல்லாத வகையில் நடை நடப்பவர்கள், படுகுழிக்குள் விழும்படிச் செய்யும் கேடு விளைவிப்பவர்கள், திருட்டுக் குணம் உடையவர்கள் ஆகிய விலைமகளிரைத் தேடிச் சென்றவன் நான். - அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர்
உரை செய்த மொழி வகை
அமுதம் போன்ற சொற்களால் (எனக்குத்) தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய தவப்பெரியார்* உபதேசித்த மொழியின் படி - அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத அசடன்
அறிவிலி இழி குலன் இவன் என
தகுதியான நடை முறையை அனுஷ்டிக்கவும், முயற்சி செய்யவும் அறியாத முட்டாள், அறிவில்லாதவன், இழி குலத்தைச் சேர்ந்தவன் இவன் என்று - இனமும் மனிதருள் அனைவரும் உரை செய அடியன் இது
பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே
சுற்றத்தார்களும், பிற மனிதர்கள் யாவரும் இழிவாய்ப் பேச, அடியேன் அத்தகைய பேச்சில் படுதல் முடியாது. இனிமேல் ஒப்பற்ற ஞானப் பொருளை நீ அருள் புரிவாயாக. - திமித திமிதிமி டமடம டமவென சிகர கரதல டமருகம்
அடிபட
திமித திமிதிமி டமடம டமவென்ற ஒலியுடன் உயரப் பிடித்த கையில் உள்ள உடுக்கை அடிபடவும், - தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள்
சிவமில் உருகியும் அரகர என
தெனன தெனதென என்று நிகழ்ச்சிகள் நிகழவும், முனிவர்கள் சிவத் தியானத்தில் உருகியும், ஹர ஹர என்று ஒலி எழுப்பியும், - அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநு தினமும் நடம்
இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே
சிறப்பான பரத சாஸ்திர முறையில் சிலம்பணிந்த மலர் போன்ற திருவடிகளை வணங்கவும், நாள்தோறும் நடனம் செய்யும் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவி பெற்ற குழந்தையே, - குமர சரவணபவ திறல் உதவிய தரும
குமரனே, சரவணபவனே, ஞான வலிமையைத் தந்த தரும மூர்த்தியே, - நிகரொடு புலமையும் அழகிய குழக குருபரன் என ஒரு மயில்
மிசை வருவோனே
ஒளியும், புலமையும் அழகோடு விளங்கும் இளைஞனே, குருபரனே, என்று அனைவரும் போற்றும்படி ஒப்பற்ற மயில் மீது வருபவனே, - குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும்
அரையொடு பசலை கொள் வளர் முலை குலவு
குறவர்கள் பயிரிட்ட தினைப்புனத்தில் பரண்மீது நின்று, இடையோடு போர் செய்யும் பசலை** நிறம் கொண்டு எழுந்த மார்பகம் விளங்கும் - குற மகள் அழகொடு தழுவிய பெருமாளே.
குற மகளான வள்ளியை அழகு பெறத் தழுவிய பெருமாளே.