தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி
நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையு முறைதரு பெருமையும்
நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும்
மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
முருக னறுமுக னெனவரு வனபெயர்
முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு
குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக்
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்
குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா
இடியு முனைமலி குலிசமு மிலகிடு
கவள தவளவி கடதட கனகட
இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக்
கிறைவ குருபர சரவண வெகுமுக
ககன புனிதையும் வனிதைய ரறுவரும்
எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.
- நெடிய வட குவடு இடியவும்
நீண்டதும், வடக்கே உள்ளதுமான மேரு மலை இடிபட்டுப் பொடிபடவும், - எழு கிரி நெறு நெறு என நெரியவும்
(சூரனின் நாட்டைச் சுற்றியிருந்த) ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிவுறவும், - முது பணி பதி நிபிட முடி கிழியவும்
முதுமை வாய்ந்ததும், பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதிசேஷனது நெருங்கிய பணா முடிகள் கிழிபடவும், - நிலம் அதிரவும் விளையாடும்
பூமி அதிரவும் விளையாடுகின்ற - நிகர் இல் கலபியும் ரவி உமிழ் துவசமும்
ஒப்பில்லாத மயிலும், சூரியனைத் தனது கூவலினால் (தினமும்) உமிழ்ந்தளிக்கும்* சேவல் அமைந்த கொடியும், - நினது கருணையும் உறை தரு பெருமையும்
உன்னுடைய கருணையும், உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும், - நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப முடியும்
உன் செந்நிறமும், இளமையும், வளமையும், இரண்டு திருவடிகளும், கடம்பமாலை அணிந்த திருமுடிகளும், - அபிநவ வனசரர் கொடி இடை
புதுமை நிறைந்த வேடர்களின் மகளாம் வள்ளியின் கொடி போன்ற இடையானது - தளர வளர்வன ம்ருகமத பரிமள
தளர்வுறும்படி வளர்கின்ற, கஸ்தூரி நறுமணம் கமழ்கின்ற, - முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும்
மொட்டுப் போல் குவிந்து பூரித்துள்ள மலை போன்ற மார்பகங்களைத் தழுவிய திரண்ட தோள்களும், - மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி
மொகுமொகுவென்று வண்டுகள் ஒலிக்கின்ற குரா மலர் மாலையை அணியும் - முருகன் அறுமுகன் என வருவன பெயர் முழுதும்
முருகன், ஆறுமுகன் என்று வரும் உன் திருநாமங்கள் யாவையும், - இயல் கொடு பழுது அற மொழிவதும் ஒரு நாளே
இயல் தமிழில் அமைத்து, குற்றமறப் பாடி நான் ஓதும் ஒரு நாள் கிடைக்குமோ? - கொடிய படுகொலை நிசிசரர் உரமொடு
கொடுமையான படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில் - குமுகும் என விசையுடன் இசை பெற மிகு குருதி
குமுகும் என்னும் ஒலி எழும்படி வேகத்துடன் தாக்க, நிரம்ப இரத்தம் - நதி வித சதியொடு குதி கொள விதி ஓட
நதி வெள்ளம் போல் தாளத்தோடு குதித்துப் பாயவும், பிரமன் அஞ்சி ஓடவும், - குமுறு கடல் குடல் கிழி பட
கலங்கி ஒலிக்கும் கடலின் நடுப்பாகங்கள் கிழிபடவும், - வடு மரம் மொளு மொளு என அடியொடு அலறி விழ
பிஞ்சுகளுடன் கூடிய மாமரம் (சூரன்) மொளுமொளுவென்று அடிப்பாகத்திலிருந்து அலறி விழவும், - உயர் குருகு பெயரிய வரை தொளை பட விடு சுடர் வேலா
உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயர் கொண்ட கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், ஒளிபடைத்த வேலைச் செலுத்தும் வேலனே. - இடியும் முனை மலி குலிசமும் இலகிடு
இடியும், கூர்மை மிக்க வஜ்ராயுதமும் (இவளுக்கு ஆயுதங்களாக) விளங்குபவை, - கவள தவள விகட தட கன கட இபமும்
கவளமாக ஊண் உண்பதும், வெண்ணிறமானதும், அழகுள்ளதும், பரந்ததும், மதச் சுவட்டினின்று மிகுந்த மதநீர் பொழியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையும், - இரணியதரணியும் உடையதொர் தனி யானைக்கு இறைவ
குருபர சரவண
பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாக உள்ள ஒப்பற்ற பெண்ணாம் தேவயானைக்குத் தலைவனே, குருபரனே, சரவணனே, - வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும்
பல முகங்களாய்ப் பரந்து வரும் ஆகாய கங்கையும், கார்த்திகைப் பெண்கள் அறுவரும், - எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே.
எங்கள் குழந்தை என்று உரிமை பாராட்டும்படி பார்வதி பெற்றெடுத்த தேவர்கள் பெருமாளே.