தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
மிசையி னசைதரு மொழியினு மருவமர்
இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக
இனிமை தருமொரு இதழினு நகையினு
மிளைய ம்ருகமத தனகுவ டழகினு
மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே
குலவி விரகெனு மளறிடை முழுகிய
கொடிய நடலைய னடமிட வருபிணி
குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள்
குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்
குதறு முதுபிண மெடுமென வொருபறை
குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான்
மலையில் நிகரில தொருமலை தனையுடல்
மறுகி யலமர அறவுர முடுகிய
வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய
மவுலி யொருபது மிருபது கரமுடன்
மடிய வொருசரம் விடுபவபன் மதகரி
மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
அதுல னிருபத மதுதனி லெழுபுவி
யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே
அவுண ருடலம தலமர அலைகட
லறவு மறுகிட வடகுவ டனகிரி
யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.
- இலகி இரு குழை கிழி கயல் விழியினும்
விளங்குகின்ற காதிலுள்ள குண்டலங்களை கிழித்துத் தாக்கும் கயல் மீன் போன்ற கண்ணிலும், - இசையின் அசை தரு மொழியினும் மரு அமர் இருள் செய்
குழலினும் இடையினும் நடையினும்
இன்னிசை போல அசைந்து எழும் பேச்சிலும், வாசனை உள்ள இருண்ட கூந்தலிலும், இடுப்பிலும், நடையிலும், - அநுராக இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும்
காம ஆசையைத் தரும் இன்பம் கொடுக்கும் வாயிதழிலும், சிரிப்பிலும், - இளைய ம்ருகமத தன குவடு அழகினும்
முதிராத, கஸ்தூரி அணிந்த, மலை போன்ற மார்பகத்தின் அழகிலும், - இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே
ஏற்படும் மோகத்துடன் நான் துணிந்து ஈடுபட்டு இவ்வேசையருக்குப் பணிவது குறையாமல், - குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன்
பொழுது போக்கி, தந்திரச் செயல்களாகிய சேற்றில் மூழ்கிய பொல்லாத் துன்பத்துக்கு ஆளானவனாகிய என்னிடம், - நடமிட வரு பிணி குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடு
போ நாள்
தாண்டவம் இட எழுகின்ற நோய்களெல்லாம் வந்து அணுக, முடிவில் யமன் என் உயிரைக் கொண்டு போகும் அந்த நாளில், - குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம்
எடும் என
அன்புச் சொற்களைச் சொல்லி அழுபவர்களும், சோர்வுற்று இருப்பவர்களும், ஈமச் சடங்குகளைச் செய்ய முயற்சி செய்பவர்களும், (நேரமாகி விட்டது) குலைந்து அழுகிப் போகும் பிணத்தை எடுங்கள் என்று கூற, - ஒரு பறை குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ
தான்
அப்போது ஈமப் பறை ஒலிக்க, (உடலை எரித்து) அழிக்கின்ற சுடு காட்டில் ஏகுதல் நல்லதாகுமோ? - மலையில் நிகர் இலது ஒரு மலை தனை உடல் மறுகி அலமர
அற உரம் முடுகிய வலிய பெல மிக உடையவன்
மலைகளுக்குள் தனக்கு ஒப்பில்லாததான ஒரு மேரு மலையை உடல் கலங்கி வேதனைப்பட, மிக்க திடத்தைக் காட்டி எடுக்க முயன்றவனும், வன்மைப் பலத்தை நிரம்ப உடையவனுமான ராவணன் - அடையவும் அதிகாய மவுலி ஒருபதும் இருபதும் கரமுடன்
மடிய ஒரு சரம் விடுபவன்
போரில் எதிர்த்து வரவும், அவனுடைய பெருத்ததான உடலும், முடிகள் ஒரு பத்தும் இருபது கைகளுடன் அற்று விழ ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவனாகிய ராமன், - மத கரி மடுவில் முறை இட உதவிய க்ருபைமுகில்
கஜேந்திரன் என்ற யானை மடுவில் (முதலை வாய்ப்பட்டு) அழைத்த போது உதவிய கருணை நிரம்பிய மேக வண்ணன், - மதியாதே அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய
அதுலன்
தன்னை மதிக்காமல் வந்த பெண் பேய் பூதனையின் உயிரை முலைப் பாலுடன் உண்டு போக்கி அருளிய ஒப்பில்லாதவன், - இரு பதம் அது தனில் எழு புவி அடைய அளவிட நெடுகிய
அரி திரு மருகோனே
தனது இரு திருவடிகளால் ஏழுலகங்கள் யாவையும் அளக்க ஓங்கி வளர்ந்தவனும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே, - அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட
அசுரர்களுடைய உடல்கள் வேதனைப்படவும், அலை வீசும் கடல் மிகவும் கலங்கவும், - வட குவடு அன்ன கிரி அடைய இடி பொடிபட அயில் விட
வல பெருமாளே.
வடக்கே உள்ள மேருமலை போன்ற கிரெளஞ்ச மலை முழுவதும் இடிபட்டுப் பொடியாகவும் வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.