திருப்புகழ் 1000 வேடர் செழுந்தினை (பொதுப்பாடல்கள்)

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
வேடர்செ  ழுந்தினை  காத்திதண்  மீதிலி  ருந்தபி  ராட்டிவி 
லோசன  அம்புக  ளாற்செயல்  ......  தடுமாறி 
மேனித  ளர்ந்துரு  காப்பரி  தாபமு  டன்புன  மேற்றிரு 
வேளைபு  குந்தப  ராக்ரம  ......  மதுபாடி 
நாடறி  யும்படி  கூப்பிடு  நாவலர்  தங்களை  யார்ப்பதி 
னாலுல  கங்களு  மேத்திய  ......  இருதாளில் 
நாறுக  டம்பணி  யாப்பரி  வோடுபு  ரந்தப  ராக்ரம 
நாடஅ  ருந்தவம்  வாய்ப்பது  ......  மொருநாளே 
ஆடக  மந்தர  நீர்க்கசை  யாமலு  ரம்பெற  நாட்டியொ 
ராயிர  வெம்பகு  வாய்ப்பணி  ......  கயிறாக 
ஆழிக  டைந்தமு  தாக்கிய  நேகர்பெ  ரும்பசி  தீர்த்தரு 
ளாயனு  மன்றெயில்  தீப்பட  ......  அதிபார 
வாடைநெ  டுங்கிரி  கோட்டிய  வீரனு  மெம்பர  மாற்றிய 
வாழ்வென  வஞ்சக  ராக்ஷதர்  ......  குலமாள 
வாசவன்  வன்சிறை  மீட்டவ  னூரும  டங்கலு  மீட்டவன் 
வானுல  குங்குடி  யேற்றிய  ......  பெருமாளே. 
  • வேடர் செழும் தினை காத்து
    வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் காத்து,
  • இதண் மீதில் இருந்த பிராட்டி
    (அங்கு) பரண் மீது இருந்த வள்ளிப்பிராட்டியாருடைய
  • விலோசன அம்புகளால் செயல் தடுமாறி
    கண்கள் ஆகிய அம்புகள் பாய்வதால் செயல் தடுமாற்றம் அடைந்ததுபோல நடித்து,
  • மேனி தளர்ந்து உருகாப் பரிதாபமுடன்
    உடல் சோர்வு அடைந்து மனம் உருகி நின்று, பரிதபிக்கத் தக்க நிலையில் (கிழவேடம் பூண்டு)
  • புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி
    தினைப் புனத்திற்கு சிறந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த திறமையைக் கவிகளில் அமைத்துப் புகழ்ந்து பாடி,
  • நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை ஆர்
    உலகத்தோர் (உனது கருணையை) அறிந்து உய்யும்படி ஓலமிட்டு உரைக்கின்ற நாவல்ல புலவர்களைக் கட்டி வசீகரிக்கும்,
  • பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில்
    பதினான்கு உலகில் உள்ளோரும் போற்றும் உனது இரண்டு திருவடிகளில்,
  • நாறு கடம்பு அணியாப் பரிவோடு புரந்த பராக்ரம
    மணம் கமழும் கடப்பமாலையை அணிந்த உன் திருவடிகளில், அன்புடன் வைத்துக் காக்கின்ற உனது திறமையை,
  • நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே
    நாடி நிற்க, அருமையான தவச் செயலால் அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ?
  • ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி
    பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து,
  • ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக
    ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி,
  • ஆழி கடைந்து அமுது ஆக்கி
    பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து,
  • அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும்
    இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமாலும்,
  • அன்று எயில் தீப்பட அதி பார வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும்
    முன்பு, முப்புரங்களும் தீயில் அழிவதற்காக, அதிக கனமாக வடக்கே உள்ள பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த வீரனுமாகிய சிவபெருமானும்,
  • எம் பரம் ஆற்றிய வாழ்வு என
    எங்களது சுமையைக் குறைத்த* செல்வமே என்று உன்னைத் துதிக்க,
  • வஞ்சக ராக்ஷதர் குலம் மாள
    வஞ்சக அரக்கர்களின் கூட்டம் அழிய,
  • வாசவன் வன்சிறை மீட்டு அவன் ஊரும் அடங்கலும் மீட்டு
    இந்திரனின் கொடிய சிறையை நீக்கி அவனை விடுவித்து, அவன் ஊராகிய பான்னுலகத்தையும் மற்றும் செல்வங்களையும் முழுவதுமாக மீட்டுத் தந்து,
  • அவன் வான் உலகும் குடி ஏற்றிய பெருமாளே.
    அவனுடைய விண்ணுலகத்தில் குடி ஏற்றி வைத்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com